இன்னும் ஓர் தசாப்தத்துக்குள் தற்போதைய உலகில் 2 ஆவது பெரிய பொருளாதார சக்தியான சீனா முதாலாவது பெரிய பொருளாதார சக்தியாக விளங்கும் அமெரிக்காவைப் பின் தள்ளி நம்பர் 1 இடத்துக்கு வந்து விடும் என IHS என்ற அமைப்பின் அறிக்கை தெரிவித்துள்ளது.
சுமார் ஒரு நூற்றாண்டுக்கும் அதிகமாக பொருளாதாரத்தில் நம்பர் 1 இடத்தில் இருந்து வரும் அமெரிக்கா இன்னும் 10 வருடங்களில் 2 ஆவது இடத்துக்கு வந்து விடும் என்பதற்குப் பல காரணங்கள் கூறப்படுகின்றன.
முக்கியமாக சீனாவில் நுகர்வோர் செலவு (consumer spending) மிகப் பெரியளவில் அதிகரித்து வருவது இக்காரணங்களில் ஒன்றாகும். விரிவாகச் சொன்னால் சீனாவின் நுகர்வோர் செலவு இன்னும் 10 வருடங்களில் 3 மடங்காக அதாவது $3.5 டிரில்லியன் டாலர்களில் இருந்து $10.5 டிரில்லியன் டாலர்களாக அதிகரித்து விடும் எனக் கணிக்கப் பட்டுள்ளது. மேலும் சீனாவில் அதிகரிக்கவுள்ள நுகர்வோர் செலவு இன்றைய விலையின் அடிப்படையில் அந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை (GDP) $28.3 டிரில்லியன்கள் ஆக்கி விடும் என்றும் இது அமெரிக்காவின் $27.4 டிரில்லியன்களை விட அதிகம் என்றும் கூறப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில் அமெரிக்காவின் GDP, $17.4 டிரில்லியன்கள் என்பதுடன் சீனவின் GDP, $10 டிரில்லியன்களும் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை 2025 ஆம் ஆண்டளவில் சீனாவின் GDP ஆனது உலகின் மொத்த GDP இன் 1/5 பங்கைக் கொண்டிருக்கும் என்றும் எதிர்வு கூறப்பட்டுள்ளது. மேலும் அதிகரிக்கவுள்ள சீனாவின் நுகர்வோர் செலவு காரணமாக தென்கிழக்கு ஆசிய நாடுகளினது வர்த்தகமும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதால் அவையும் அதிக நண்மை பெறும் என்றும் கூறப்படுகின்றது. வேறு விதமான கணிப்புக்களின் படி சீனாவின் தற்போதைய பொருளாதார நிலமை கூட அமெரிக்காவினதின் நிலைக்கு ஏறக்குறைய சமமாக உள்ளது என்று கூறப்படுவதும் குறிப்பிடத்தக்கது.