-ஊடகப்பிரிவு-
நாட்டில் சீனி உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக, கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். உள்நாட்டு சீனி உற்பத்தி தொடர்பில் அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே, அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளதாவது, ஒரு பில்லியன் ரூபாய் வரை நட்டத்தைப் பதிவு செய்திருந்த சீனி நிறுவனம், கடந்த 2016ஆம் ஆண்டில் ஒரு பில்லியன் ரூபாயை இலாபமாக ஈட்டியதுடன், கடந்த 2017ஆம் ஆண்டில் இதனை 1.1 பில்லியன் ரூபாய் வரை விருத்தி செய்ய முடிந்தது.
இந்நிலையில் 2018ஆம் ஆண்டில் இறுதிக்குள் சீனி உற்பத்தியை அதிகரித்து அதன் மூலம் 1.8 பில்லியன் ரூபாய் வரை இலாபம் ஈட்ட திட்டமிட்டுள்ளதாக, அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். கடந்த 2015 ஆம் ஆண்டு வரை நட்டத்தை பதிவு செய்திருந்த இலங்கை சீனி நிறுவனம், செவனகலை மற்றும் பெலவத்தை ஆகிய தொழிற்சாலைகளில் பணியாற்றிய கரும்பு செய்கையாளர்கள், மற்றும் பொருட்கள் விநியோகஸ்தர்களுக்கு உரிய வகையில் கொடுப்பனவுகளைச் செலுத்த முடியாத நிலை காணப்பட்டது.
இவ்வாறான நிலையில் இந்த விடயம் குறித்து கவனம் செலுத்திய அமைச்சர் ரிஷாட் பதியுதீன், குறித்த தொழிற்சாலையைக் கட்டியெழுப்ப வேண்டுமாயின் உற்பத்தி செய்பாட்டை அதிகரிக்க வேண்டும் என்ற முனைப்புடன், செயற்பட்டு தற்போது, இலாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்றியமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.