Breaking
Mon. Dec 23rd, 2024

– சுஐப் எம்.காசிம் –

 
வடமாகாணத்தின் முக்கிய தொழிற்சாலைகளான காங்கேசந்துறை, சீமெந்து கூட்டுத்தாபனம், பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை, ஆனையிறவு – குறிஞ்சாக்கேணி உப்பளம் ஆகியவை யுத்தத்தின் கோரத்தினால் சீர்குலைந்து கிடக்கின்றன. ஆனையிறவு உப்பளத்தின் ஒரு பகுதி சமாதானம் ஏற்பட்ட பின்னர் செய்கை பண்ணப்பட்டு வருகின்றபோதும், பெரும்பாலான உப்பு வாய்க்கால்கள் கைவிடப்பட்டே காணப்படுகின்றன. அமைச்சர் றிசாத் பதியுதீன், தனது கைத்தொழில், வர்த்தக அமைச்சின் கீழ் இந்தத் தொழிற்சாலைகளை சுமார் 08 மாதங்களுக்கு முன்பே பொறுப்பேற்றார்.

இந்தத் தொழிற்சாலைகளை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவர வேண்டும் என்பதில் அவர் காட்டிய ஆர்வம், வடமாகாண புத்திஜீவிகள், தொழிலாளர்களின் வேண்டுகோள்கள், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜனின் அக்கறை ஆகியவற்றுக்கு மேலா,க ஜனாதிபதி மைத்திரிபால அவர்களின் வழிகாட்டல்களை அடுத்து, அமைச்சர் றிசாத் பதியுதீன் இந்தத் தொழிற்சாலைகளை மீண்டும் இயங்கச் செய்ய முயற்சி எடுத்துள்ளார்.

கடந்த வாரம் இந்த தொழிற்சாலைகளுக்கு விஜயம் செய்த அமைச்சரும், அவரது அதிகாரிகளும் இடிபாடுகளுக்கு மத்தியில் கிடந்த கட்டடங்களையும், உருக்குலைந்த இயந்திரங்களையும் கண்டு வேதனையடைந்தனர். அந்தப் பிரதேச மக்கள் தொழிற்சாலைகள் இயங்க வேண்டும் என்பதில் அக்கறையாக இருந்ததை அவர் கண்ணாரக் கண்டார்.

பின்னர் யாழ் கச்சேரியில், அரச அதிபர் வேதநாயகன் தலைமையில் இடம்பெற்ற உயர்மட்ட மாநாட்டில் சீமெந்து தொழிற்சாலையை ஆரம்பிப்பது குறித்து அமைச்சர் றிசாத் ஆராய்ந்தார். யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், சரவணபவன், ஸ்ரீதரன் மற்றும் மாகாண சபை அமைச்சர்களான குருகுல ராசா, ஐங்கரநேசன், வடமாகாண சபை தலைவர் சிவனம் வடமாகாண சபை உறுப்பினர்கள், முதலமைச்சரின் பிரதிநிதி, அதிகாரிகள் ஆகியோரும் பங்கேற்றனர்.

வடமாகாணத்தின் மக்கள் பிரதிநிதிகள் இந்தத் தொழிற்சாலையை ஆரம்பிப்பது தொடர்பில் ஆரம்பத்தில் ஏடாகூடமான கருத்துக்களையே வெளியிட்டு, கூட்டத்தின் நோக்கத்தை திசை திருப்பினர், காங்கேசந்துறையில் பணிபுரிந்த அதிகாரிகள், ஊழியர்கள், மக்கள் பிரதிநிதிகளுக்கு மாற்றமாக தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட வேண்டுமென்பதில் உறுதியான கருத்துக்களை வெளியிட்டனர். எனினும் றிசாத் பதியுதீன் தனது முடிவுரையில் கையாண்ட யுத்திகளாலும், யதார்த்தபூர்வமான கருத்துக்களாலும், எதிர்ப்பவர்களையும் ஏற்கச்செய்து நோக்கத்தில் வெற்றி கண்டார்.

கூட்ட முடிவில் அமைச்சர் றிசாத்தை சூழ்நது கொண்ட தமிழ் அரசியல் முக்கியஸ்தர்கள், கருத்து வேறுபாடுகளை மறந்து மிகவும் அந்நியோன்னியமாக உரையாடினர். அங்கு சமூகமளித்திருந்த உதயன் பத்திரிகையின் முகாமைத்துவப் பணிப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான சரவணபவன், அமைச்சரை தனது பத்திரிகை நிறுவனத்துக்கு அழைத்துச் சென்று, பல்வேறு பகுதிகளை பார்வையிடச் செய்தார்.

யுத்தகாலத்தில் பத்திரிகை நிறுவனத்துக்கு நடந்த அட்டூழியங்களின் வடுக்களை தாங்கியிருந்த காட்சியறைக்கும் அவரைக் கூட்டிச் சென்றார். உதயன் பத்திரிகையின் ஆசிரியர் பீடத்தினர் அமைச்சரைப் பேட்டி கண்டனர். அமைச்சர் தனது பேட்டியில் துணிவான தனது கருத்துக்களை இங்கிதமாக வெளியிட்டமை குறித்து பத்திரிகையாளர்கள் நேரில் பாராட்டினர்.

அதன் பின்னர் மாலை இழுபறிக்குள்ளாகி இருக்கும் யாழ் மாவட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்ற பிரச்சினைகள் தொடர்பில், கச்சேரியில் நடைபெற்ற உயர்மாநாட்டில் அமைச்சர் பங்கேற்று, அங்குள்ள அதிகாரிகளை இலாவகமாகக் கையாண்டு மீள்குடியேற்றப் பிரச்சினைகள் பலவற்றுக்கு தீர்வு கண்டார்.

இந்த மக்களின் பிரச்சினை தொடர்பில் அங்கஜன் எம்பியும் ஆர்வம் காட்டினார். மௌலவி சுபியான் அந்த மக்களின் பிரச்சினைகள் அடங்கிய அறிக்கை ஒன்றை சமர்ப்பித்து, அதனடிப்படையில் அதிகாரிகளின் பரஸ்பர உதவியுடன் தீர்வுகள் பெறப்பட்டன.

எஞ்சிய பிரச்சினைக்கு எதிர்வரும் 03ஆம் திகதி அமைச்சரின் பங்கேற்றலுடன் தீர்வு காண்பது என முடிவு செய்யப்பட்டது.
அதன் பின்னர் அன்று மாலை யாழ் உஸ்மானியாவில் மீள்குடியேறிய முஸ்லிம்களுடனான சந்திப்பிலும் அமைச்சர் கலந்துகொண்டு உரையாற்றினார்.

முன்னதாக அன்றைய தினம் விடியற்காலை அமைச்சர் றிசாத் பதியுதீன், எவருக்கும் சொல்லாமல் அங்கஜன் எம்பியின் உதவியாளருடன் மோட்டார் சைக்கிளில் பொம்மைவெளி, பரச்சைவெளி ஆகிய இடங்களுக்கு சென்று, அந்த மக்கள் படுகின்ற கஷ்டங்களை அறிந்துகொண்டார். அவரது இந்த அதிரடி விஜயத்தின் போது தான் கண்ணால் கண்டுகொண்டதை, உயர்மட்ட மாநாட்டில் எடுத்துரைத்தபோது அதிகாரிகளும் மனம் நொந்தனர்.

நெகிழ்வுப் போக்கை கடைப்பிடித்தனர். யாழ் முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதில் இந்த நிகழ்வும் வழிவகுத்ததென்று கூறினால் அதில் மிகை ஒன்றும் இல்லை.ri3.jpg2_3

By

Related Post