Breaking
Mon. Dec 23rd, 2024

அஸ்ரப் ஏ சமத்

ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் தவிசாளர் பசீர் சேகுதாவூத் (பா.உ) அண்மையில் கொழும்பில நடைபெற்ற சுகைப் எம். காசீமின் நூல் வெளியீட்டின்போது பசீர் சேகுதாவுத் ஆற்றிய முழு உரை

ஹிட்லரின் பாணியில் முஸ்லிம்களைப் பற்றிய சுத்தப் பொய்கள் இனவாதிகளினால் அவிழ்த்து விடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆட்சியைப் பிடிக்கலாம் என்று நம்புகின்றவர்களின் விளையாட்டில் நாம் அகப்பட்டுவிடக் கூடாது எனத் தெரிவித்துள்ள ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளர் பசீர் சேகுதாவூத் கடந்த ஜனவரி 8ல் ஏற்பட்ட ஆட்சிமாற்றம் என்பது இனவாதத்தை இல்லாமற் செய்வதற்காக இன்னொரு இனவாதத்தை பிரதியீடு செய்கின்ற ஆட்சிமாற்றமாக அமைந்துவிடக் கூடாது எனத் தெரிவித்துள்ளார்.

சிறுபான்மை மக்களின் இந்த விருப்பத்தை நிறைவேற்றி, நடைபெற்றது உண்மையான மாற்றம் தான் என்பதையும், ஒரு இனவாதத்துக்கு எதிராக இன்னொரு இனவாதத்தை பிரதியீடு செய்தது அல்ல என்பதையும் தெரிவிக்க வேண்டுமாக இருந்தால், வில்பத்துப் பிரச்சினையின் உண்மை வடிவத்தை இனம் கண்டு அதனைத் தீர்த்;து வைப்பதற்கு ஜனாதிபதி தொடக்கம் இந்த அரசாங்கத்தில் இருக்கும் அத்தனைபேரும் உதவுவதுதான் ஒரே வழியாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஊடகவியலாளர் சுஹைப் எம். காசிம் எழுதிய ‘வடபுலத்து முஸ்லிம் அகதிகளின் மீள்குடியேற்றச் சவால்கள்’ எனும் நூலின் வெளியீட்டு விழா தபால் திணைக்கள கேட்போர் கூடத்தில் கடந்த சனிக்கிழமை 06.06.2015 அன்று நடைபெற்றப் போது விஷேட அதிதியாகக் கலந்து கொண்டு மு.கா. தவிசாளர் பஷீர் சேகுதாவூத் உரையாற்றிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் பேசுகையில் கூறியதாவது :

ஒரு அநியாயம் நடக்கின்ற போது அதைக் கண்டு சகிக்க முடியாதவர்கள் அதற்கெதிராகப் போராடுவார்கள். வடக்கு முஸ்லிம்களுக்கு நிகழ்ந்த அநியாயத்தைக் கண்டு கொதித்து எழுந்தவர்கள் ஏராளம். பிரச்சினைகள் ஏற்கனவே இருக்கிறன. எவர் அப்பிரச்சினைகளில் சிலவற்றுக்காவது தீர்வைக் காண்கிறரோ அவரே தலைவராகிறார். அந்த வகையில் இந்நூலை எழுதிய சுஹைப். எம். காசிமையும் நாம் கருதலாம். அவருக்கு எனது வாழ்த்துக்கள்.

‘வடபுலத்து அகதிகள் எனும் போது தமிழர்களாக இருந்தாலும் முஸ்லிம்களாக இருந்தாலும் அவர்கள் அகதிகளே. தமிழராக இருந்தாலும், முஸ்லிம்களாக இருந்தாலும் அவர்கள் வடபுலத்துக்காரர்களே’ என்பதைக் காணத்தவறியமையால் தான் இன்றைய வில்பத்துப் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. அன்று முஸ்லிம்கள் துரத்தப்படாதிருந்தால் இன்று மீள் குடியேற்றம் தேவைப்பட்டிருக்காது. மீள் குடியேற்றம் தேவைப்பட்டிருக்காவிட்டால் வில்பத்து பிரச்சினையும் ஏற்பட்டிருக்காது. வடபுலத்துத் தமிழ், முஸ்லிம் அகதிகளுடைய வாழ்வில் விடிவே இல்லையா? இருளுக்குப் பிறகு இரவுதானா? வெளிச்சமே இல்லையா? என்ற கேள்விகளை கேட்டுத் தீர்வை நாடிச் செல்ல வேண்டிய அவசியம் இன்னும் தொடர்கிறது.

‘வடபுலத்து முஸ்லிம் அகதிகளின் மீள்குடியேற்றச் சவால்கள்’ என்பதற்கும் அப்பால் சிறுபான்மை மக்களுடைய பெரும்பாலான பிரச்சினைகளுக்கு அண்மை காலங்களில் எவ்விதத்தீர்வும் இல்லாத நிலை காணப்படுகிறது. இவ்விடத்தில் நான் இரண்டு விடயங்களை அடையாளம் காண்கிறேன்.
பெருந்தேசியவாதம் பெரும் எடுப்பில் நிறுவனமயப் படுத்தப்பட்டிருக்கும் அதே வேளை, சிறுபான்மைத் தேசியவாதம் வாக்குறுதித் தேசியவாதமாக பலவீனப்பட்டுச் சுருங்கி இருக்கின்ற நிலையை நான் அடையாளம் காண்கிறேன். வீராப்புடனான போராட்டம் பின்னர் போராகவும் வெடித்த நிலையில், போரை எதிர்கொள்கின்ற எதிர்ப் போராட்டம் மிக மோசமாக இருந்தது.

ஒரு நடவடிக்கைக்கு எதிர்நடவடிக்கை மோசமாக இருக்கும்; எதிர் நடவடிக்கைக்கு எதிர்நடவடிக்கை அதைவிட இன்னும் மோசமாகவே இருக்கும். இவ்வகையில் தொடர்ச்சியாக சிறுபான்மைத் தேசியம் உக்கிரமாக செயற்பட்டு வந்த காலங்கள் போய், இன்று அது வெறும் வாக்குறுதித் தேசியவாதமாகவும், மேடைகளிலும், ஊடகங்களிலும் வாய்சவடால் தேசியமாகவும் சுருங்கியிருக்கிறது. இந்த இக்கட்டான நிலையில் இருந்துதான் பெருந் தேசியவாதத்தின் இறுக்கமானதும் கெட்டித்தனமானதுமான நிறுவனமயப்படுத்தலோடு கூடிய செயற்பாடுகளினால், இன்றைய சிறுபான்மை மக்கள் அன்றைய காலக்கட்டத்தை விட மோசமான பிரச்சினைகளுக்கு, இன்றைய காலக்கட்டத்தில் முகம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அத்தோடு உலகளாவிய ரீதியில் புதிய தாராளவாதப் பொருளாதாரக் கோட்பாட்டை பின்பற்றுகின்ற முதலாளித்துவம், சமூக செயற்றிட்டத்தில் தோல்வி அடைந்து வரும் நிலையில், தற்போது இலங்கையில் உறுதியாக நிறுவனமயப்படுத்தப் பட்டிருக்கின்ற சிங்களப் பெருந்தேசியவாதத்திடமும் படுமோசமாகத் தோல்வியடைந்திருக்கிறது. இதன் எதிரொலியாகவே இலங்கையின் சிறுபான்மை மக்கள் இன்றுள்ள இத்தகைய அவலங்களுக்கு முகம் கொடுக்க வேண்டி ஏற்பட்டிருக்கிறது.

மிக ஆக்ரோசமான முறையில் இன்றையகால கட்டத்தில் பெரும்பான்மை மக்களுக்கும், சிறுபான்மை மக்களுக்கும் இடையே மனக்கசப்புகள் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. இவ்வாறான ஒரு தருணத்தை வரலாற்றில் எங்கும் நாம் கண்டதில்லை. விசேடமாக தமிழர்களுக்கு எதிரான செயற்பாடுகள் வேறொரு பழைய வடிவத்திலும், முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகள் ஒரு புதிய வீச்சோடும் புதிய வடிவத்திலும் பேரினவாத பெருந்தேசியவாத தீவிரவாத செயற்பாட்டாளர்களினால் முன்னெடுக்கப்பட்டு வருவதை நாங்கள் அவதானிக்கிறோம். முஸ்லிம்களுக்கு எதிரான மனக்கசப்புக்களுக்கும், பேரினவாத தீவிரவாத செயற்பாடுகளுக்கும் வயது நூறுக்கு மேலாகிறது. இதில் வில்பத்து விவகாரம் ஆகப் பிந்தியது.

நூற்றாண்டு காலமாக முஸ்லிம்களுக்கு எதிராக செய்யப்பட்டுவருகின்ற செயற்பாடுகளை எண்ணிக் கணக்கெடுப்பது கடினமாக இருந்தாலும், புள்ளிவிபர ஆர்வலர்களின் கூற்றுப்படி ஆயிரத்துக்கு அதிகமான சிறிய, பெரிய நடவடிக்கைகள் இலங்கை முழுவதிலும் அரங்கேற்றப் பட்டிருக்கின்றன.

சிறுபான்மை மக்களுக்கு விசேடமாக முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகளுக்கு பதிலீடாக சிறுபான்மையினர் என்ன செய்தார்கள்? பேரின, தீவிரவாத செயற்பாட்டாளர்களுக்கு காலாகாலமாக பல சந்தர்ப்பங்களில் அப்போதிருந்த அரசாங்கங்கள் குறைந்த அளவிலும், கூடிய அளவிலும் உதவிகள் புரிந்த வரலாற்றையே நாம் பார்க்கிறோம். அந்த உதவிகளினால் கோபமடைந்த சிறுபான்மை மக்கள் ஆட்சி மாற்றம் ஒன்றை கொண்டுவரும் வகையில் செயற்பட்டனர். தமிழ் கட்சிகளினதும், பின்பு வந்த முஸ்லிம் கட்சிகளினதும் செயற்பாடுகள் இதனையே செய்து வந்தன. இவ்வாறு கடந்த காலங்களில் ஏற்படுத்தப்பட்ட ஆட்சி மாற்றம் என்பது ஒரு இனவாத சக்தியை மாற்றி இன்னொரு இனவாத சக்கியை பிரதியீடு செய்வதாகவே இருந்ததையே காண்கிறேன்.

கடந்த ஜனவரி 8ல் ஏற்பட்ட ஆட்சிமாற்றம் என்பது அன்று நடைபெற்ற ஆட்சி மாற்றங்கள் போல இனவாதத்தை இல்லாமற் செய்வதற்காக இன்னொரு இனவாதத்தை பிரதியீடு செய்கின்ற ஆட்சிமாற்றமாக அமைந்துவிடக் கூடாது என்பதே எனது பிரார்த்தனையாகும். சில முற்போக்கு சக்திகளினால் விசேடமாக சிறுபான்மை மக்களால் பெரும் ஆக்ரோசத்தோடும் விருப்பத்தோடும் கொண்டு வரப்பட்ட ஆட்சி மாற்றம், கடந்த காலங்களைப் போல் இருந்துவிடக் கூடாது.
இம்மாற்றம் ஒரு புரட்சிகரமான மாற்றமாகவும், இத்தனைக் காலமும் இல்லாதிருந்த புதிய இலங்கையைக் காண்கின்ற மாற்றமாகவும் அமைந்து மூவின மக்களும் சமாந்திரமானதும், சமத்தும் மிக்;கதுமான அதிகாரத்துடன் வாழ்க்கையை கொண்டு செல்வதற்கு வழியமைக்கும் அரசாங்கமாக அமைய வேண்டும் என்பதே எல்லோரதும் விருப்பமாகும்.

சிறுபான்மை மக்களின் இந்த விருப்பத்தை நிறைவேற்றி, நடைபெற்றது உண்மையான மாற்றம் தான் என்பதையும், ஒரு இனவாதத்துக்கு எதிராக இன்னொரு இனவாதத்தை பிரதியீடு செய்தது அல்ல என்பதையும் தெரிவிக்க வேண்டுமாக இருந்தால், வில்பத்துப் பிரச்சினையின் உண்மை வடிவத்தை இனம் கண்டு அதனைத் தீர்த்;து வைப்பதற்கு ஜனாதிபதி தொடக்கம் இந்த அரசாங்கத்தில் இருக்கும் அத்தனைபேரும் உதவுவதுதான் ஒரே வழியாகும்.
வில்பத்து விடயத்தில் நான் காணும் ஒரு விடயம் இருக்கிறது. ‘அழிவுகள் ஏற்படுத்தப்பட்டுவிட்டன’.

முஸ்லிம்கள் கள்ளத்தனமாக காணிபிடிப்பவர்கள், காடுகளை அழிப்பவர்கள்; அரச காணிகளில் அத்துமீறி குடியேறுபவர்கள்; காட்டு மிருகங்களைக் கொல்பவர்கள் என்ற அபிப்பிராயத்தை, அப்பாவி சிங்கள மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்தாகி விட்டது. இங்கு தான் நம் முஸ்லிம் சமூதாயத்தின் தோல்வியும், சிங்களப் பெருந்தேசிய தீவிரவாதத்தின் வெற்றியும் ஏற்பட்டிருக்கிறது என நான் கருதுகிறேன்.
இப்பிரச்சினையை நாம் எவ்வாறு கையாள்வது? ஒரு முஸ்லிம் வர்த்தகர் மரத்தை வெட்டினார் என்றால் அப்பிரச்சினையின் தனமை, வடிவம், தாக்கம் வேறாகவும், ஒரு கம்பனி காடழித்தது, காணிப் பிடித்தது என்றால் அப்பிரச்சினையும், தன்மையும், தாக்கமும், வடிவமும் வேறு என்று நோக்கப்படுகின்றது. இவைகள் சமூகத்தின் மீது செலுத்தும் தாக்கம் குறைவானது. ஆனால் ஒரு அரசியற் தலைமை காடழிக்கிறது; காணிபிடிக்கிறது என்றும் அந்த அரசியற் தலைமையின் ஆசிர்வாதத்தில் முஸ்லிம் சமூகம் இவ்வாறான அநியாயங்களைச் செய்கிறது என்றும் சிங்கள மக்களுக்குள் கருத்துக்கள் செல்வது எமது சமூகத்தின் பெரிய அழிவுக்கு வித்திடக் கூடிய விஷம் போன்றது என்பதை புரிந்துக் கொண்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அரசியல்வாதிகள் வீரர்களாகலாம் ஆனால் வெற்றி பெற முடியாமல் போய்விடும். இந்த இடத்தில் தான் முஸ்லிம் சமூகம் அவதானமாக இருக்க வேண்டும் என்ற எனது அவதானக் குறிப்பை இங்கு முன்வைக்க விரும்புகிறேன்.
சிங்கள மக்கள் மத்தியில் இவ்வாறான கருத்துக்கள் சென்றுவிட்ட நிலையில் இப்பிரச்சினையை எவ்வாறு அணுகுவது? சிங்களப் பேரினவாதிகளே உங்களை ஒரு கை பார்க்கிறோம் என்று வெறும் வீராப்புடன் செயற்படுவதா? அல்லது முஸ்லிம்களுக்குள் இருக்கும் மதம் குறித்த உற்சாகத்தை சாதகமாக அரசியலாக்குவதன் நிமித்தம் செயற்படுவதா? ஏற்கனவே ஒரு நூற்றாண்டு காலம் முஸ்லிம்களுக்கு பிரச்சினைகள் ஏற்படும் போது மாத்திரம் அப்பிரச்சினைகளை பார்த்து பழக்கப்பட்ட சமூகமாகவே எமது சமூகம் இருக்கிறது. வருமுன் காப்போனாக சமூகம் இல்லை. ஒரு உறுதியான வேலைத்திட்டம் அதுவும் முன்கூட்டிய செயற்திறன் மிக்க தீர்வு வேலைத்திட்டம் தேவைப்படுகிறது.
மனிதனுக்கு நினைத்து அழுகின்ற உரிமையை மறுக்கின்றவர்கள் மத்தியில், தீவிரவாதிகளுக்கும் அழுகின்ற உரிமை இருக்கிறது என்று ஏற்றுக் கொண்டவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் இவ்வாறு ஒத்துக் கொண்டமையில் இருந்து முஸ்லிம் சமூகத்துக்கு இன்று எழுந்திருக்கின்ற பிரச்சினைகளைக் கையாளுவதற்குறிய சரியான வழியைக் கண்டுக்கொள்ள முடியும் என நான் நம்புகிறேன். எங்களை நாங்கள் புரிந்துகொள்வதைவிட மற்றைய சமூகங்கள் எங்களைப் புரிந்துக் கொள்ள வைப்பதில் நாம் வெற்றியடைந்திருக்கிறோமா? அடுத்த சமூகத்தவர்களுக்கு எங்களைப் புரிய வைப்பதில் தான் முஸ்லிம் சமூகத்தின் வெற்றி தங்கியிருக்கிறது. சிங்களவர்கள் மத்தியில் தமிழர்களின் பிரச்சினைகளை தெளிவுப்படுத்த தவறியமை தான் அவர்களின் போராட்டம் தோல்வியடைந்தமைக்கான பிரதான காரணம். முஸ்லிம்களும், முஸ்லிம்ளுடைய பிரச்சினைகளை சிங்கள மக்களுக்குப் புரிய வைக்க முடியுமாக இருந்தால் அவர்களும் நமக்காக குரல் கொடுப்பார்கள். வில்பத்து விவகாரத்தில் யாரும் தனித்து வீரராக முயற்சிக்க வேண்டாம். இல்லாவிடில் இதனால் முஸ்லிம் சமூகம் தோற்றுப் போய்விடும்.
பொய்களை தொடர்ச்சியாக ஊதிப்பெருக்கிக் கூறிவந்ததால் இறுதியில் மக்கள் அதை நம்பி விடுவார்கள் என்பது ஹிட்லரின் கூற்று. அதே பாணியில் முஸ்லிம்களைப் பற்றிய சுத்தப் பொய்கள் இனவாதிகளினால் அவிழ்த்து விடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆட்சியைப் பிடிக்கலாம் என்று நம்புகின்றவர்களின் விளையாட்டில் நாம் அகப்பட்டுவிடக் கூடாது. சமூகப் பிரக்ஞையோடு நான் காணும் இவ்விடயங்கள் கட்சியரசியலுக்கு அப்பாற்பட்டது. முஸ்லிம்களின் இப்பிரச்சினைகளுக்கான தீர்வை காணும் நோக்கில் அதைச் சரியாகக் கையாளும் வல்லமையை இறைவன் அனைத்து முஸ்லிம் தலைவர்களுக்கும் தரவேண்டும் எனப் பிரார்த்திக்கிறேன்.

Related Post