ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்காலம் பெரும் ஆபத்தினை எதிர்கொண்டுள்ளதாகவும், அது தொடர்பில் தாம் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அத்துடன், சமல் ராஜபக்ஷவிற்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படுவது தொடர்பில் வெளியான செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லையென குறிப்பிட்ட அவர், அமைச்சுப் பதவி குறித்து சமலிடம் யாரும் தொடர்புகொண்டு பேசவில்லையெனவும், அது பொய்யான தகவலென்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், எதிரணியின் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் குமார வெல்கமவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிப்பதில் ஆர்வம் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாளை நடைபெறவுள்ள முதலாவது நாடாளுமன்ற அமர்வில், மஹிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டணியாக இணைந்து எதிரணியில் அமரப்போவதாகவும், இவர்கள் தமக்கு எதிர்க்கட்சி அந்தஸ்த்தை கோரவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.