கடந்த 2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட சுனாமியின் போது காணாமல் போன 9 வயது சிறுவன் இன்று 21 வயது இளைஞராக பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள சம்பவமொன்று முல்லைத்தீவில் இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத் தின் குமாரபுரத்தை நிரந்தர வசிப்பிடமாகக் கொண்ட ஜெகநாதன் குருதேவன் என்பவரே 9 வயதில் காணாமல் போயுள்ளார். இவர் காணாமல் போன போது தரம் 4இல் கல்வி கற்று வந்துள்ளார்.
2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தினால் பலர் உயிரிழந்துள்ளதுடன், இன்னும் சிலர் காணாமலும் போயுள்ளனர். அந்த நாளில் காணாமல் போனவர் பட்டியலில் ஜெகநாதன் குருதேவனும் இடம்பிடித்துவிட்டார்.
இவ்வாறு அனர்த்தத்தின் பின்னர் தனது மகனைக் காணவில்லை என இவரது பெற்றோர்கள் அனைத்து பதிவுகளையும் மேற்கொண்டிருந்தனர்.தனது மகனை காணாமல் இவர்கள் எல்லா இடங்களிலும் முறைப்பாடு செய்துள்ளதுடன், மகன் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற எண்ணத்தில் இருந்துள்ளனர்.எனினும் சகல சந்தர்ப்பங்களிலும் மகன் பற்றிய முயற்சியை எடுத்துள்ளதாக இவர்கள் குறிப்பிட்டனர்.
11 வருடங்கள் சிங்கள பிரதேசத்தில் வாழ்ந்து வந்த குறித்த இளைஞர் தற்போது தனது சொந்த மொழியான தமிழ் மொழியை மறந்து சிங்கள மொழியிலேயே பேசிக் கொண்டிருக்கிறார்.
இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், சுனாமி ஏற்பட்ட போது அப்போது எனக்கு வயது ஒன்பது. முல்லைத்தீவிலிருந்து வவுனியா வரை தனியாக சென்று பின்னர், வவுனியாவிலிருந்து புகையிரதத்தில் ஏறி நண்பர்களுடன் சென்றேன்.
இவ்வாறு புகையிரதத்தில் சென்ற நான் ஒரு ரயில் நிலையத்தில் இறங்கி நின்றுகொண்டிருந்தேன். அப்போதுதான் நான் நிற்கும் இடம் மாகோ புகையிரத நிலையம் என தெரிய வந்தது. அப்போது அங்கு மக்கள் நடமாட்டம் மிகவும் குறைவாகவே இருந்தது.இடம், மொழி, என எதுவுமே தெரியாமல் தனியாக நின்று கொண்டிருந்த என்னை ஒருவர் அழைத்துச் சென்று உண்பதற்கு உணவு வாங்கிக் தந்தார். உணவு உண்ட பின்னர் அவர் என்னை மாகோ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார் .
இவ்வாறு பொலிஸில் ஒப்படைக்கப்பட்ட நான் பின்னர், தம்புள்ளையில் அளவ்வ என்ற இடத்தில் பிக்கு ஒருவரினால் நிர்வகிக்கப்படும் சிறுவர் இல்லத்திற்கு அனுப்பி வைத்தார்கள்.
நான் இங்கிருந்து சென்ற போது நான்காம் தரத்தில் கல்வி கற்றேன். பின்னர் அங்கு சென்றதும் தரம் – 9 வரை கற்றுள்ளேன். கல்வி கற்பதை பாதியிலேயே நிறுத்திவிட்டு அச்சகமொன்றில் கடமையாற்றி வந்தேன். அவர்கள் எனக்கு உணவு, உடை, இருப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதி வாய்ப்புக்களை ஏற்படுத்தித் தந்தனர். ஆனால், மாதாந்தம் கொடுப்பனவுகள் எதனையும் கொடுக்கவில்லை. எனக்கு வழங்கப்படும் சம்பளப்பணத்தை வங்கியொன்றில் கணக்கு ஆரம்பித்து அந்த வங்கிப் புத்தகத்தில் சேமிப்பு செய்து வந்தனர்.
அத்துடன், நான் இந்துவாக இருந்தாலும், பௌத்த ஆலயத்திற்கே வணக்க வழிபாடுகளுக்காக சென்றிருக்கிறேன். 11 வருடங்கள் எனக்கு சந்தோஷமாக இருந்தாலும், இப்போது எனது பெற்றோருடன் வாழும் நாட்களை யோசிக்கும் போது 11 வருடங்கள் பெரிதாக தெரியவில்லை என்றார்.
தம்புள்ளை பிரதேசத்தில் முல்லைத்தீவு பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இருப்பதாக வெளியான தகவல்களை அடுத்து சிறுவர் நன்னடத்தைப் பிரிவினர் அங்கு சென்று குறித்த இளைஞரை விசாரணை செய்த போது தான் முல்லைத்தீவு கொக்குத்தொடுவாயில் படித்ததாகவும், அது தண்ணீரூற்றில் இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். இதுபற்றிய தகவல்கள் உரிய முறையில் பரிமாறப்பட்டுள்ளதுடன், மாங்குளத்தில் உள்ள சிறுவர் நன்னடத்தை பிரிவு அதிகாரிகள் குறித்த இளைஞனின் பெற்றோர்களை அழைத்து தம்புள்ளைக்கு செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.
பின்னர் திட்டமிட்டபடி சிறுவர் நன்னடத்தை அதிகாரிகள் மற்றும் பெற்றோர்கள் அங்கு சென்ற போது நீதிமன்றத்தினூடாக குறித்த இளைஞர் 11 வருடங்களின் பின்னர் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளார்.
குறித்த இளைஞர் தனது குடும்பத்துடன் மீள் இணைப்புச் செய்த போது இவரின் வங்கி வைப்புப் புத்தகம் ஒப்படைக்கப்பட வில்லை. அடையாள அட்டை இல்லாத குறித்த இளைஞரை அடையாள அட்டையை பெற் றுக் கொண்டு தந்தை யையும் அழைத்து வந்து வங்கிப் புத்தகத்தை பெற்றுக்கொள்ளுமாறு இளைஞரை வளர்த்த பௌத்த மதகுரு குறிப்பிட்டுள்ளார்.