Breaking
Sat. Jan 11th, 2025

கடந்த சுனாமி அவல காலத்தில் வடகிழக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடு கட்டவென கூறி ´ராதா´ என்ற நிறுவனத்தின் ஊடாக நிதி மோசடி செய்ததாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டினால் பாராளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸிற்கு வௌிநாடு செல்ல நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

சம்பவம் வருமாறு,

கடந்த சுனாமி அவல காலத்தில் வடகிழக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடு கட்டவென கூறி அப்போதைய ஜனாதிபதி அலுவலகத்தில் அனுமதி பெற்று ´ராதா´ என்ற நிறுவனம் 2006இல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவன தலைவராக டிரான் அலஸ் செயற்பட்டுள்ளார்.

திறைசேரி பொறுப்பு 803இன் கி்ழ் ஜனாதிபதி அலுவலகம் ஊடாக திறைசேரி ´ராதா´ நிறுவனத்திற்கு பணம் கொடுத்துள்ளது. வீடு கட்டவென ´பீ.எம்.கே.ஹொல்டிங்ஸ்´ என்ற நிறுவனம் ´சவரஸ்ட் சிவில் என்ஜினீயர்´ என்ற நிறுவனமும் அமைக்கப்பட்டுள்ளது. ´பீ.எம்.கே.ஹொல்டிங்ஸ்´ நிறுவனம் போலி ஆவணங்கள் சமர்பித்து பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் ´சவரஸ்ட் சிவில் என்ஜினீயர்´ நிறுவனம் பதிவு செய்யப்படவில்லை. இந்நிறுவன ஆவணங்கள் போலியானவை.

திறைசேரியில் இருந்து ஜனாதிபதி அலுவலகத்திற்கு பணம் அனுப்பப்பட்டு அங்கிருந்து ராதா நிறுவனத்திற்கு பணம் வழங்கப்பட்டுள்ளதுடன் அப்பணம் ´ஊம்ஸ் (Oomps) டெக்ஸ்டைல் லிமிடட்´ என்ற நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

´பீ.எம்.கே.ஹொல்டிங்ஸ்´ மற்றும் ´ஊம்ஸ் (Oomps) டெக்ஸ்டைல் லிமிடட்´ ஆகிய நிறுவனங்களின் பணிப்பாளர் சபை பிரதானியாக சாந்திகுமார், கஜன்குமார் செயற்பட்டுள்ளதுடன் பணிப்பாளர் சபையின் ஏனைய உறுப்பினர்களாக அவரது தாய் மற்றும் சகோதரிகள் உள்ளனர்.இந்த ´ஊம்ஸ் (Oomps) டெக்ஸ்டைல் லிமிடட்´ நிறுவனத்திற்கு வழங்கப்படும் பணத்தை டிரான் அலஸும் புலிகள் இயக்க உறுப்பினர் எமில் காந்தனும் திருப்பிப் பெற்றுள்ளனர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

´ராதா´ நிறுவனத்திற்கு திறைசேரி 645 மில்லியன் ரூபா அனுப்பியுள்ளது. ஆனால் வடகிழக்கு பகுதிகளில் இவர்களால் எந்த வீடும் கட்டப்படவில்லை. இதில் 125 மில்லியன் (9 காசோலைகள் மூலம்) மோசடி செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 2006ம் ஆண்டு இந்நிறுவனம் மூடப்பட்டுள்ளது.

இந்த நிதி மோசடி தொடர்பில் சாந்தி குமார், கஜன்குமார், ஆனந்தி சாந்திகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இன்று (07) கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டனர். மேலும் ராதா நிறுவன தலைவர் டிரான் அலஸ் மற்றும் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் 5 பேருக்கு வௌிநாடு செல்ல நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஊழல் எதிர்ப்பு அமைப்பால் பொலிஸ் மா அதிபருக்கு செய்யப்பட்ட முறைப்பாடு ஒன்றின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Post