தமது சுயநலனை கருத்திற் கொண்டே சுதந்திர கட்சியில் மஹிந்தவுக்கு ஆதரவான சிலர் ஜனாதிபதியின் பேச்சுக்கு இணங்கி 19 ஆவது திருத்தத்தினை நிறைவேற்ற ஆதரவு வழங்கியுள்ளனர் என நவ சம சமாஜ கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று அதிகாரத்தை பகிர்ந்து நாட்டை ஐக்கியப்படுத்துவோம் என்ற அமைப் பின் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இதுவரை 19 ஆவது திருத்தம் அமுலுக்கு வரவேண்டும் என்ற கொள்கையுடன் நாம் போராடி வந்த நிலையில் வெற்றி கண்டுள்ளோம். 19 ஆவது திருத்தத்தை நிறைவேற்றிக்கொள்ள சுதந்திரக் கட்சி பூரண ஒத்துழைப்பு வழங்கியது. ஆனால் அவர்களது நோக்கம் நாட்டின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டது அல்ல.
உத்தேச 19 ஆவது திருத்தம் நிறைவேற்றப்படாவிட்டால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட்டிருக்கும். அத்தேர்தலில் தம்மால் வெற்றி கொள்ளமுடியாது என்ற எண்ணத்தினாலேயே சு. கட்சியில் உள்ள மஹிந்த ஆதரவாளர்களும் திருத்தத்தை நிறைவேற்ற ஒத்துழைப்பு வழங்கினர்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜக் ஷ சர்வதேசத்தில் சிலரையும் இணைத்துக் கொண்டு 19 ஆவது திருத்தத்தை நிறைவேற்றாது தடுக்க முயற்சி செய்த போதிலும் அவரது திட்டம் சாத்தியமாகவில்லை.
குணதாச அமரசேகர, பெங்கமுவே நாலக தேரர், கலாகொட அத்தே ஞானசார தேரர் போன்றோர் மஹிந்த ஆட்சியை மீள் உருவாக்க பெரிதும் முயற்சித்து வந்த போதிலும் அவர்களும் தோல்வி அடையப் போவது உறுதியாகிவிட்டது.
19 ஆவது திருத்தத்திற்கு எதிராக சரத் வீரசேகர வாக்களித்திருந்தார். அவர் குறித்து எனது சகபாடி என்ற வகையில் கவலை அடைகிறேன். அவர் செய்தது தவறு என்ற போதிலும் அவர் கல்வி கற்ற சூழலும் அதற்கு பொறுப்பேற்க வேண்டும். பொதுவாக கொழும்பு ஆனந்தா, நாலந்தா கல்லூரி மாணவர்களுக்கு சிங்கள மக்கள் மட்டுமே நாட்டிற்கு உரித்துடையவர்கள் என்ற எண்ணம் ஆழமாகப் பதிந்துள்ளமை இயல்பாகிவிட்டது. எவ்வாறாயினும் அவர் 19 ஆவது திருத்தத்திற்கு எதிராக வாக்களித்தமை நாட்டின் எதிர்கால நலன் கருதாமை என்றே எண்ணுகின்றோம் என்றார்.