Breaking
Mon. Nov 25th, 2024

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சும் அதன் கீழான கைத்தொழில் அபிவிருத்தி சபையும் இணைந்து நடாத்திய, தொழில் முயற்சியாளர்களுக்கான சுயதொழில் ஊக்குவிப்பு அறிவூட்டல் கருத்தரங்கு மன்னார், முசலி பிரதேச சபைக்குட்பட்ட கிராமங்களில் இன்று (22 ) இடம்பெற்றது.

அதிகளவான  வளங்களைக் கொண்டுள்ள முசலி மக்கள், பொதுவாக விவசாயம் கால்நடை வளர்ப்பு, மீன்பிடி போன்றவற்றினை மாத்திரமே அவர்களது அடிப்படை தொழிலாகச் செய்து வருகின்றனர். அந்தப் பிரதேசத்தில் உள்ள வளங்களைப் பயன்படுத்தி சுயதொழில்களை செய்வதற்கான வாய்ப்பு காணப்படுகின்ற போதும், அதுபற்றிய தெளிவு மக்களிடம் இல்லாத காரணத்தினால், பலர் இன்று வறுமை கோட்டின் கீழ் வாழ்கின்றனர். அதுமாத்திரமன்றி, பெண்களின் தலைமைத்துவத்தின் கீழ் இருக்கும் குடும்பங்கள்  மற்றவர்களில் தங்கி வாழும் நிலையிலிருந்து விடுபடவும், சுயதொழில் மூலமாக அவர்களினது வறுமையைப் போக்கும் நோக்கிலேயுமே இந்தக் கருத்தரங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
அந்தவகையில், சிரட்டையினை பயன்படுத்துதல், சங்கு சிப்பி மூலம் செய்யப்படும்  சுயதொழில், பனை உற்பத்தி மூலமான சுயதொழில், ஆடை தைத்தல், சவர்க்காரம், தானியங்கள் பொதியிடல், பாதணிகள் செய்தல், அரிசி மாவு கடலை மாவு போன்றவை தயாரித்தல், வாகனம் திருத்தும் நிலையம் போன்ற இன்னும் பல சுயதொழில்கள் பற்றிய அறிவூட்டல் இந்தக் கருத்தரங்குகளில் வழங்கப்பட்டது.

முசலி பிரதேச சபை தவிசாளர் சுபியான் தலைமையில் இடம்பெற்ற இந்த கருத்தரங்கு நிகழ்வுகளில், வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும், அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளருமான ரிப்கான் பதியுதீன், மன்னார் பிரதேச சபை தவிசாளர் முஜாஹிர்,  அமைச்சரின் பொதுசன தொடர்பாடல் அதிகாரி மொஹிடீன், மீள்குடியேற்ற செயலணியின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் முஜீபுர் ரஹ்மான், தேசிய இளைஞர் சேவைகள் மன்ற வடமாகாண பணிப்பாளர் முனவ்வர் மற்றும் அமைச்சின் அதிகாரிகள் உட்பட ஏராளமான பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

(ன)  

Related Post