Breaking
Mon. Dec 23rd, 2024
சுவிட்சர்லாந்து பாராளுமன்றத்திற்கான பொது தேர்தலின் வாக்கு எண்ணிக்கை வெளியாகி உள்ள நிலையில், அந்நாட்டின் முக்கிய கட்சியான சுவிஸ் மக்கள் கட்சி வரலாற்று சிறப்பு வாய்ந்த வெற்றியை பெற்றுள்ளது.
சுவிஸில் நேற்று தொடங்கிய பொது தேர்தலுக்கான வாக்குபதிவின் முடிவுகள் நள்ளிரவு முதல் வெளியாகி வந்துள்ளது.
200 பாராளுமன்ற கீழ் சபை உறுப்பினர்கள் பதவிக்கு போட்டியிட்ட சுவிஸின் 3 முக்கிய கட்சிகளான சுவிஸ் மக்கள் கட்சி(SVP) 65 தொகுதிகளிலும், சமூக ஜனநாயக கட்சி(SP) 43 தொகுதிகளிலும் மற்றும் லிபரல் கட்சி(FDP) 33 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
சுவிஸ் மக்கள் கட்சியை பொருத்தவரை கடந்த 2011ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலை விட, இந்தாண்டில் கூடுதலாக 11 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதாவது, சுவிஸ் நாட்டு மக்களின் 50 சதவிகித வாக்குகள் சுவிஸ் மக்கள் கட்சிக்கு கிடைத்துள்ளது.
முதலாம் உலக போருக்கு பின்னர், சுவிஸ் அரசியலில் அதிக எண்ணிக்கையில் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ள முதல் கட்சி என்ற பெயரையும் சுவிஸ் மக்கள் கட்சி பெற்றுள்ளது.
சுவிஸ் மக்கள் கட்சியின் இந்த வெற்றி சுவிஸ் குடிமக்களுக்கு மகிழ்ச்சிகரமான செய்தியாக இருந்தாலும், இது சுவிஸில் குடியேறியுள்ள தமிழர்கள் உள்ளிட்ட வெளிநாட்டை சேர்ந்த அகதிகளுக்கும் மற்றும் எதிர்காலத்தில் சுவிஸ் நாட்டிற்கு குடியேற விரும்பும் வெளிநாட்டினர்களுக்கும் கசப்பான செய்தியாகவே பார்க்கப்படுகிறது.
இதற்கு மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுவது சுவிஸ் மக்கள் கட்சி புலம்பெயர்ந்தவர்களுக்கு முற்றிலும் எதிரான கொள்கைகளை கொண்டுள்ளது தான் தற்போது வெளிநாட்டினர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
சுவிஸ் நேரடி ஜனநாயக ஆட்சியின் அடிப்படையில், நாட்டில் எந்தவித சட்டரீதியான மாறுதல்களை கொண்டு வரவேண்டும் என்றால் அதனை ஜனாதிபதியோ அல்லது அமைச்சரோ தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி கொண்டுவர முடியாது.
அகதிகளுக்கு குடியமர்வு அளிப்பது, வரியை உயர்த்துவது, ஐரோப்பிய நாடுகளுடன் இணைவது உள்ளிட்ட எந்த விவகாரமாக இருந்தாலும், சுவிஸ் மக்கள் ஒப்புதல் அளித்தால் மட்டுமே அதனை அமைச்சர்கள் நிறைவேற்ற முடியும்.
இதுபோன்ற ஒரு சூழலில், அகதிகளுக்கு முற்றிலும் எதிரான கருத்துக்கள் கொண்டுள்ள சுவிஸ் மக்கள் கட்சியை அபாரமாக வெற்றி பெற வைத்துள்ளதால், சுவிஸ் மக்களுக்கும் அதிகரிக்கும் அகதிகள் எண்ணிக்கையில் அதிருப்தி ஏற்பட்டுள்ளதையே காட்டுகிறது.
இதே கருத்தை தான் வெற்றிக்கு பிறகு நேற்று பெர்ன் மாகாணத்தில் சுவிஸ் மக்கள் கட்சியின் தலைவரான டோனி புரூன்னர் செய்தியாளரகளிடம் தெரிவித்துள்ளார்.
‘சுவிஸ் மக்கள் கட்சிக்கு கிடைத்துள்ள இந்த வெற்றி மூலம் ஒரு விடயம் தெளிவாக தெரிகிறது. அதாவது, அதிகரிக்கும் அகதிகளின் எண்ணிக்கையால் சுவிஸ் மக்கள் வேதனை அடைந்துள்ளனர் என்பதை தான் இந்த வெற்றி காட்டுகிறது” என டோனி புரூன்னர் தெரிவித்துள்ளார்.
இது மட்டுமல்லாமல், AFP என்ற செய்தி ஏஜென்சிக்கு அளித்த பேட்டியில், வெளிநாட்டினர்களுக்கு உகந்த நாடுகளாக ஐரோப்பாவை மாற்ற மாட்டோம். இந்த வெற்றிக்கு பிறகு, உலக நாடுகளுக்கு ஒரு செய்தியை வெளிப்படுத்துகின்றோம்.
இனிவரும் காலங்களில், சுவிஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் அடைக்கலம் என்ற பேச்சிற்கு இடமில்லை. யுத்தங்களங்களிலிருந்து உயிர் பிழைத்து தப்பி வரும் அகதிகளுக்கு கூட அடைக்கலம் வழங்க மாட்டோம்” என தடாலடியாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது அகதிகள் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
தேர்தலுக்கு முன்னதாக, சுவிஸ் பாராளுமன்றத்தில் ஒரு அமைச்சரவையை மட்டுமே சுவிஸ் மக்கள் கட்சி நிர்வகித்து வந்தது.
மேலும், தேர்தல் பிரச்சாரத்தின்போது ’இனி ஒரு அமைச்சரவை ஏற்க முடியாது. புதிய அரசாங்கம் அமையும்போது சுவிஸ் மக்கள் கட்சிக்கு இரண்டு அமைச்சரவைகள் வழங்க வேண்டும். அவ்வாறு வழங்காவிட்டால், கூட்டணியில் இருந்து வெளியேறி எதிர்க்கட்சியாக செயல்படுவோம்’ என பகிரங்க அறிவிப்பு வெளியிட்டார்.
ஆனால், தற்போது கருத்து கணிப்புகளையும் மீறி சுவிஸ் மக்கள் கட்சி அதிக வாக்குகளுடன் 65 தொகுதிகளில் வெற்றி வாகை சூடியுள்ளது. எனவே, தன்னுடைய கோரிக்கையை SVP மேலும் பலப்படுத்தியுள்ளது.
எதிர்வரும் டிசம்பர் மாதம் 9ம் திகதி, புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சரவைகளை தீர்மானிக்கும் நிகழ்வு நடைபெற உள்ளதால், அதில் சுவிஸ் மக்கள் கட்சிக்கு எத்தனை அமைச்சரவை ஒதுக்கீடு செய்யப்படும் என்பது தீர்மானிக்கப்படும்.
சுவிஸ் மக்கள் கட்சியின் கோரிக்கை நிறைவேறினால், அது சுவிஸில் உள்ள புலம்பெயர்ந்தவர்களுக்கு சாதகமான எதிர்காலமாக இருக்காது என்பதே அரசியல் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது.

By

Related Post