Breaking
Wed. Dec 25th, 2024

இலங்கையர்களால் சுவிஸ் வங்கியில் இரகசியமாகப் பேணப்பட்டுவரும் வங்கிக் கணக்குகள் தொடர்பான இலங்கை அரசாங்கத்தின் விசாரணைகளுக்கு உதவும் நோக்கில் சுவிஸ் நிபுணர் க்ரெட்டா பெனர் இலங்கை வந்திருப்பதாகத் தெரியவருகிறது. சுவிட்சர்லாந்து அரசாங்கத்திடம் இலங்கை விடுத்த கோண்டுகோளுக்கு இணங்க இவர் இலங்கை வந்துள்ளார்.

92 இலங்கையர்கள் சுவிஸ் வங்கிகளில் 129 கணக்குகளைப் பேணி வருவதாக சுவிஸ் வங்கி கோப்புக்களை ஆதாரங்காட்டி புலனாய்வு ஊடகவியலாளர்களுக்கான சர்வதேச கூட்டமைப்பு கடந்த பெப்ரவரி மாதம் தகவல் வெளியிட்டதைத் தொடர்ந்து இந்த விடயம் குறித்து அரசு கவனம் செலுத்தியிருந்தது. அண்ணளவாக இந்த சுவிஸ் வங்கிக் கணக்குகளில் 58.3 மில்லியன் அமெரிக்க டொலர் பெறு மதியான பணம் வைப்பிலிடப்பட்டுள்ள தாகச் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இலங்கையர்கள் சார்பில் 10.7 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் இருப்பதாகவும், சுவிஸ் வங்கியில் கணக்குகளைப் பேணும் நாடுகளில் இலங்கை 112வது இடத்தில் இருப்பதாகவும் கூறப்பட்டிருந்தது. இந்தக் குற்றச்சாட்டுக்களைத் தொடர்ந்து இதுபற்றி அரசாங்கம் விசாரணை நடத்தும் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க பாராளுமன்றத்தில் அறிவித்திருந்தார்.

இந்த நிலையிலேயே சுவிஸ் நிபுணர் ஒருவர் இலங்கைக்கு அழைக்கப்பட்டுள்ளார். நல்லாட்சிக்கான பேசல் நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகமான பெனர், சொத்துக்களை மீளப்பெற்றுக்கொள்வது தொடர்பான சர்வதேச நிறுவனத்தின் பணிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். 2005 ஆம் ஆண்டு முதல் 2008ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் அவர் இந்தப் பதவியில் பணியாற்றியுள்ளார்.

இவர் பல்வேறு நாடுகளின் அரசாங்கங்கள், நன்கொடையாளர்கள், சர்வதேச அமைப்புக்களுக்கு நல்லாட்சி மற்றும் ஊழல்மோசடி போன்ற விடயங்களில் ஆலோசனை பெற்றுக்கொடுத்துள்ளார். ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஊழல் மோசடிப் பிரிவு உருவாக்கப்படுவதற்கு முக்கியபங்காற்றியவராக இவர் காணப்படுகிறார்.

Related Post