சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ஐசிசி) முன்னால் நிறுத்தப்பட வேண்டியவர் என்று அறிவிக்கப்பட்ட சூடான் அதிபர் ஒமர் அல் பஷிர் ஆப்பிரிக்க யூனியன் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக தென்னாப்பிரிக்கா சென்றுள்ளார்.
மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள், போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை ஆகிய குற்றச்சாட்டுக்கள் ஒமர் அல் பஷிர் மீது சுமத்தப்பட்டுள்ளன.அவரைக் கைதுசெய்யுமாறு தென்னாப்பிரிக்க அரசாங்கத்திடம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கோரியுள்ளது.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை ஏற்றுக்கொண்டுள்ள உறுப்புநாடுகளில் ஒன்றான தென்னாப்பிரிக்கா சூடான் அதிபரைக் கைதுசெய்வதற்கு கடமைப்பட்டுள்ளது. சர்வதேச நீதிமன்றத்தின் இந்த கோரிக்கைக்கு உடன்படுவதற்கு ஆப்பிரிக்க யூனியன் முன்னதாக மறுத்திருந்தது.
புருண்டி, தெற்கு சூடான் ஆகிய நாடுகளின் குழப்பநிலைமைகள் குறித்தும் ஆப்பிரிக்கக் கண்டத்தில் நிலவும் இஸ்லாமியவாத வன்முறைகள் பற்றியும் ஆப்பிரிக்க யூனியன் மாநாடு கவனம் செலுத்தவுள்ளது.