Breaking
Mon. Jan 6th, 2025

அரசாங்கத்தின் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களினால் சூழற்பாதிப்புக்களையும் சுமார் 1 இலட்சம் அகதிகளை தாங்கிக் கொண்டதனால் தாக்கத்துக்குள்ளான புத்தளம் மாவட்டத்தின் அபிவிருத்திக்கென விஷேட வேலைத்திட்டமொன்றை உருவாக்குமாறு கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்தார்.

வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் இன்று (15) கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறியதாவது,

பல்வேறு சவால்களுக்கும் பிரச்சினைகளுக்கும் மத்தியிலே நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் சமர்ப்பிக்கப்பட்ட இந்த வரவு செலவுத்திட்டம் சிறப்பானது.

கல்வி, சுகாதார, விவசாய நடவடிக்கைகள் சுற்றுலாத்துறை ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக தொலைநோக்குடன் தயாரிக்கப்பட்டுள்ள இந்த வரவு செலவுத்திட்டமானது இந்த நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு பாரிய பங்களிப்பை நல்குமென நாம் துணிந்து கூற முடியும்.

யுத்தத்தினாலும், இடப்பெயர்வினாலும் பாதிக்கப்பட அனைத்து சாராருக்கும் இந்த வரவு செலவுத்திட்டத்தில் நன்மை கிடைத்துள்ளது. போரினால் பாதிக்கப்பட்டு விதவையான பெண்களை இந்த வரவு செலவுத்திட்டம் முகம் பார்த்துள்ளது. அத்துடன் யுத்தத்தில் ஈடுபட்ட புலிகள் இயக்கத்திலிருந்து விலகி புனர்வாழ்வு பெற்ற உறுப்பினர்களுக்கான விஷேட பொருளாதார மேம்பாட்டுத்திட்டத்தை இந்த வரவு செலவுத் திட்டம் அறிமுகப்படுத்தியுள்ளது.

1990 ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்டு சுமார் 27 வருடகாலமாக அகதி முகாமில் வாழும் மக்களின் மீள்குடியேற்றத்திற்கென அமைக்கப்பட்ட விஷேட செயலணிக்கென 2750 மில்லியன் ரூபாய்கள் இந்த வரவு செலவுத்திட்டத்தில் ஒதுக்கப்பட்டு அவர்களுக்கான விஷேட வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் அறிவிப்பை நிதியமைச்சர் வெளிப்படுத்தியுள்ளார். யாருமே இற்றை வரை கண்டு கொள்ளாத அகதி முஸ்லிம் சமூகத்துக்கு விடிவைப் பெற்றுக்கொடுக்க வழிவகை செய்திருக்கும் நிதியமைச்சருக்கு இந்த சந்தர்ப்பத்தில் இந்த மக்களின் சார்பில் நன்றிகளைத் தெரிவிக்கின்றேன்.

நான் அமைச்சரவையில் சமர்ப்பித்த பத்திரத்திற்கிணங்க மன்னார் நகர அபிவிருத்தி மற்றும் சிலாவத்துறை நகர அபிவிருத்தி ஆகியவற்றுக்கு நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளமைக்கு நன்றிகளைத் தெரிவிக்கின்றேன்.

மன்னார் நகரத்தில் நவீன வசதிகளுடன் கூடிய பஸ் நிலையம், சந்தை, மன்னார் கோட்டை மற்றும் சிலாவத்துறை நகர அபிவிருத்திக்கு நிதியொதுக்கீடு செய்யப்பட்டமையை பாராட்டுகின்றேன். எனினும் இந்த சபையில் வரவு செலவுத்திட்டத்தை சரியாக வாசிக்காமல் சிலாவத்துறை நகர அபிவிருத்தி தொடர்பில் இனவாதக் கண்ணோட்டத்துடன் உறுப்பினர் ஒருவர் பேசியமை கவலையானது.

சுற்றுலாத்துறையை திட்டமிட்ட அடிப்படையில் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

யுத்தத்தினாலும், அதன் விளைவினாலும் ஏற்பட்ட இனமுறுகள் மற்றும் புரிதல் இல்லாத தன்மையினாலுமே இந்த நாடு பின்னடைவான நிலைக்கும் கடன் பெறும் நிலைக்கும் மற்றவர்களிடம் கையேந்தும் நிலைக்கும் தள்ளப்பட்டது. சமாதான சூழலில் சுற்றுலாத்துறையை வளர்த்தெடுப்பதற்கு பாரிய நிதியொதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கைத்தொழிற்பேட்டை, தகவல் தொழில்நுட்ப மேம்பாடு கல்வித்துறையில் மாண்வர்களின் காப்புறுதி தொழிநுட்பக் கல்வி, மற்றும் தொழில்ற்பயிற்சி நடவடிக்கைகளுக்கும் பாரிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதோடு வறுமை ஒழிப்பையும் கருத்திற்கொண்டு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

இந்த சந்தர்ப்பத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு நகரத்தையும் அபிவிருத்தி செய்யுமாறு நிதியமைச்சரிடம் வேண்டுகின்றேன்.

சுஐப் எம் காசிம்

Related Post