Breaking
Mon. Dec 23rd, 2024

-சுஐப் எம்.காசிம் –

வடக்கிலே யுத்தத்தினாலும் யுத்தத்தின் விளைவுகளாலும் பாதிக்கப்பட்டு நிர்க்கதியாகி நிற்கும் மக்களின் வேதனைகளை போக்குவதற்காகவே மீள்குடியேற்றச் செயலணி உருவாக்கப்பட்டுள்ளது எனவும், இதில் எந்தவிதமான குறுகிய நோக்கங்களும் கிடையாது எனவும் அமைச்சர் றிசாத் பதியுதீன் நேற்று (19/08/2016) தெரிவித்தார்.

முசலிப் பிரதேச வெள்ளிமலை மன்/பதியுதீன் மகா வித்தியாலத்தில் அமைக்கப்பட்ட புதிய கட்டிடத் திறப்பு விழாவில், பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது,
நீண்டகாலமாக அகதிகளாக வாழும் தமிழ், முஸ்லிம் மக்களின் வாழ்க்கையை மீளக்கட்டியெழுப்பி, அவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த வேண்டுமென்ற உயரிய நோக்கிலேயே, இந்தச் செயலணியை அமைப்பதற்கான யோசனை ஒன்றை நாம் கொண்டுவந்தோம்.

எனினும், இவ்வாறன ஆலோசனைக் கூட்டங்களில் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தியவர்கள், தங்களது பிரச்சினைகளை பார்க்கவும், தீர்த்துக்கொள்ளவும், நாங்கள் இருக்கின்றோம் எனவும், அமைச்சரவையில், அமைச்சர் சுவாமிநாதன் தமிழ் மக்களின் பிரச்சினைகளைப் பார்ப்பார் எனவும் எடுத்துரைத்தனர். இதனால் பாதிக்கப்பட்ட சிங்கள, முஸ்லிம் மக்களின் விடிவுக்காக பல்வேறு பிரயத்தனங்களை மேற்கொண்டு, கஷ்டங்கள், சிரமங்களுக்கு மத்தியில் இந்தச் செயலணியை உருவாக்கினோம். அதற்கு எவராவது முட்டுக்கட்டை போடுவது தர்மமல்ல.

நாங்கள் யதார்த்தத்தை விளக்கி முறையாக அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்ததனாலேயே, அது அங்கீகரிக்கப்பட்டு என்னையும் அதில் இணைத்தலைவராக்கினார்கள்.
நான் எந்தவொரு மதத்துக்கோ, எந்த ஒர் இனத்துக்கோ. எந்தவொரு பிரதேசத்துக்கோ அநீதி இழைத்தவன் அல்ல. அவர்களின் நல்வாழ்வுக்காக மனப்பூர்வமாக உழைத்திருக்கின்றேன்.

வன்னி மாவட்டத்திலும், குறிப்பாக மன்னார் பிரதேசத்திலும் இன, மத பேதமின்றி எனது பணிகள் வியாபித்திருக்கின்றன. பாலங்கள், பிரதானவீதிகள், உள்வீதிகள், மின்சாரம், குடிநீர், தொழில்வாய்ப்பு என்று இன, மத பேதம் பாராது முடிந்தளவில் நான் உதவியிருக்கின்றேன்.

எனினும், என்னை வீழ்த்த வேண்டும், எனது செயற்பாடுகளை முடக்க வேண்டும், எனது வேகத்தைக் குறைக்க வேண்டும், என்னை அவமானப்படுத்த வேண்டும், எனது பணிகளைச் சீர்குலைக்க வேண்டும் என்ற நோக்கிலே, ஒரு கூட்டம் மூர்க்கத்தனமாக அலைந்து திரிகின்றது. நான் சார்ந்த சமூகத்திலும் ஒருசிலர், என்னைப் பழிவாங்குவதற்காக துடித்துக்கொண்டு திரிகின்றனர்.

பதவியைத் தருபவன் இறைவனே. மக்கள் பணியை எங்கள் மூலம் செய்விப்பவனும் அந்த இறைவனே. எவர் எது நினைத்தாலும் இறைவன் நாடினாலே தவிர எதுவும் நடக்காது, என்ற உண்மையை நான் இங்கு உணர்த்த விரும்புகின்றேன்.

நான் எதை வழங்கினாலும், எதைச் செய்தாலும் அதற்குத் தடையாக இருந்து விமர்சனம் செய்வதும், என்னை தூசிப்பதும் சிலரின் வழக்கமாகி விட்டது.

பல்வேறு சவால்களுக்கும், தடைகளுக்கும், முட்டுக்கட்டைகளுக்கும் மத்தியிலேதான், நான்கு தேர்தல்களுக்கு முகங்கொடுத்து நான் வெற்றி பெற்றிருக்கின்றேன். கடந்த தேர்தலில் வளர்த்த கடாக்கள் எங்கள் மார்பிலே பாய்ந்ததனால், நாம் எதிர்ப்பார்த்த இரண்டு எம்.பிக்களை அடைய முடியாதநிலை உருவாகியபோதும், தற்போது தன்னந்தனியனாக நின்று பணியாற்றுகின்றேன்.

எத்தனை தடைகள் வந்தபோதும், எனது இலட்சியத்திலிருந்து நான் ஒருபோதும் பின்வாங்கப்போவதில்லை. இறைவன் அதற்குரிய தைரியத்தையும், சக்தியையும் எனக்கு வழங்கியுள்ளான்.

வடமாகாண புத்திஜீவிகள் எனக்கு முடியுமான ஆலோசனைகளை வழங்க முடியும். அவர்கள் உரிமையுடன் என்னை தட்டிக்கேட்க முடியும். அதைவிடுத்து எனது பணிகளுக்குக் குந்தகமாக இருப்பது சமூகத்துக்கு ஆரோக்கியம் தரப்போவதில்லை. வடமாகாணத்தின் ஒரேயொரு கெபினட் அமைச்சராகவும், அரசாங்கத்தின் முக்கியமான மக்கள் பிரதிநிதியாகவும் இருக்கும் என்னுடன் இணைந்து பணியாற்றுவதன் மூலம், தமிழ்-முஸ்லிம் உறவை மேலும் வலுப்படுத்த வழி ஏற்படும்.

முசலிப் பிரதேசத்தைப் பொறுத்தவரையில், இன்று வானளாவ உயர்ந்து நிற்கும் கட்டிடங்கள் வானத்திலிருந்து திடீரென விழுந்து முளைத்ததல்ல. எத்தனையோ வருடங்கள் நான் பட்டகஷ்டங்களின் வெளிப்பாடே, என்பது உங்கள் மனச்சாட்சிக்குத் தெரியும். எனினும் எனது முயற்சியினால் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களுக்குப் பிறர் உரிமை கொண்டாடுவதும், எம்மால் கட்டப்பட்ட கட்டிடங்களை எங்களுக்குத் தெரியாமல், வேறுசிலர் திறந்து வைப்பதும் நாகரீகமான செயலல்ல.

மன்னார் மாவட்டம் கல்வியில் முன்னேற வேண்டும். இங்குள்ள பாடசாலைகளில் கற்கும் மாணவர்கள் சீரிய கல்வியைப் பெறவேண்டும். அதற்கு அதிபர்கள், ஆசிரியர்களின் அர்ப்பணிப்பான சேவையே பிரதானமானது. பாடசாலைகளின் வளப்பற்றாக்குறைகளை விரைவில் தீர்ப்பதற்கு, என்னாலான அத்தனை நடவடிக்கைகளையும் நான் மேற்கொள்வேன் என்றும் அமைச்சர் உறுதியளித்தார்.

r-1.jpg2_-1.jpg3_-1 r-5.jpg2_-5

By

Related Post