Breaking
Mon. Nov 25th, 2024

-முர்ஷிட் கல்குடா-

மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்பவர்களுக்கு தொழில் ரீதியாக மாற்றத்தை கொண்டு வருவோம் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவரும், கிராமிய பொருளாதார பிரதி அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட குடும்பிமலை பகுதியில், செங்கல் உற்பத்தியாளர்களுக்கான வாழ்வாதார உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

கிராமிய பொருளாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம், செங்கல் உற்பத்தியில் ஈடுபடும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

பிரதி அமைச்சர் இங்கு உரையாற்றுகையில்-

மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்பவர்களுக்கு வாழ்வாதாரத்தை கொடுத்து, தொழில் ரீதியாகச் செய்யக் கூடிய ஒரு மாற்றத்தை கொண்டு வந்து, அதன் மூலம் இந்நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிப்பு செய்ய வேண்டும்.

 

குடும்பிமலை பிரதேசத்தில் போதுமான காணி வளம், நீர் வளம் இருக்கின்றது. இதனை சரியான முறையில் பயன்படுத்தி, உற்பத்திகளை தரமான முறையில் செய்து, அதனை சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்பை எங்களால் பெற்றுத்தர முடியும்.

எல்லோரும் ஒற்றுமையாக இருந்து செயற்படுவீர்கள் என்று சொன்னால் நாங்கள் உங்களுக்கு இவ்வாறான உதவிகளைச் செய்ய தயாராக இருக்கின்றோம் என்றார்.

இந்நிகழ்வில் கிரான் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பயனாளிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

 

 

 

Related Post