43 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் கோவா உள்பட 9 நகர விமான நிலையத்தில் வந்திறங்கியதும் இ-விசா வழங்கும் திட்டம் வியாழக்கிழமை துவங்கி வைக்கப்பட்டது. ஆஸ்திரேலியா, பிரேசில், கம்போடியா, குக் தீவுகள், பிஜி, பின்லாந்து, ஜெர்மனி, இந்தோனேசியா, இஸ்ரேல், ஜப்பான், ஜோர்டான், கென்யா, க்ரிபாட்டி, லாவோஸ், லக்சம்பர்க், மார்ஷல் தீவுகள், மொரீஷியஸ், மெக்சிகோ, மைக்ரோனேசியா, மியான்மர், நியூசிலாந்து, நார்வே, ஓமன், பாலஸ்தீனம், பிலிப்பைன்ஸ், கொரியா, ரஷ்யா, சமாவ், சிங்கப்பூர், சாலமன் தீவுகள், தாய்லாந்து, டோங்கா, ஐக்கிய அரபு அமீரகம், உக்ரைன், அமெரிக்கா, வியட்நாம் உள்ளிட்ட 43 நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்தியா வந்த உடன் விமான நிலையத்தில் இ-விசா வழங்கும் திட்டம் வியாழக்கிழமை துவங்கி வைக்கப்பட்டது.
இந்த விசா வசதி கோவா, சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூர், கொச்சி மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் உள்ள விமான நிலையங்களில் துவங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த விசா 30 நாளைக்கு செல்லுபடியாகும். பின்னர் தூதரகத்தின் அனுமதியோடு விசா முடியும் நாளை தள்ளிப் போடலாம். இந்த விசா முறையால் கோவாவில் இந்த ஆண்டு 15 சதவீதம் கூடுதல் சுற்றுலாப் பயணிகள் வரக்கூடும் என்று நம்பப்படுகிறது. கோவாவில் தற்போது சீசன் காலம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விசா முறையால் சுற்றுலாத் துறை வளர்ச்சி காணும் என்று கோவா மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் திலீப் பாருலேகர் தெரிவித்துள்ளார்.