Breaking
Sun. Dec 22nd, 2024

பிஸ்மில்லாஹிர் றஹ்மானிர் றஹீம்
-அல்மதத் யா றஸுலல்லாஹ்-
நபீ முஹம்மத் (ஸல்) அவர்களின் வீட்டாரைச் சார்ந்தவர்கள் இமாமுனா ஜஃபர் அஸ்ஸாதிக் றழி அவர்கள்
நபி ஸல் அவர்களின் குடும்பத்தாரை நேசிப்பது ஒவ்வொரு முஃமின் மீதும் கடமை ஆகும். இது அல்குர்ஆனின் ஆணையாகும்.
அல்லாஹு தஆலா அல்குர்ஆனில் பின்வருமாறு கூறுகின்றான்.
قل لا أسئلكم عليه أجرا إلا المودة فى القربي
நபீயே! நீங்கள் கூறுவீராக. உறவினர்களில் அன்பு வைப்பதைத் தவிர வேறு எந்த ஒரு கூலியையும் உங்களிடம் நான் கேட்கவில்லை.
(அஷ்ஷுறா 23)
இங்கே உறவினர்கள் என்று கூறப்படுவது நபி ஸல் அவர்களின் வீட்டாரையே குறிக்கும் என்பது ஏகோபித்த முடிவாகும். இந்த வசனம் இறங்கிய போது யாரஸுலல்லாஹ்! அவர்களை அன்பு வைப்பது அவசியமான உங்களின் உறவினர்கள் யார்? என்று ஸஹாபாக்கள் வினவினர்.
அதற்கு நபி (ஸல்-அம்) அவர்கள் “அலீ,பாத்திமா அவர்களின் இரண்டு பிள்ளைகள் (றழியல்லாஹு அன்ஹும்) என்று கூறினார்கள்.

இன்னுமொரு சந்தர்ப்பத்தில் செய்யிதுனா அலீ இப்னு அபீதாலிப், செய்யிததுனா பாத்திமா அஸ்ஸஹ்றா, செய்யிதுனா ஹஸன், செய்யிதுனா ஹுஸைன், றழியல்லாஹு அன்ஹும் ஆகியோரை நபி ஸல் அவர்கள் அழைத்து ”இறைவா! இவர்கள் எனது வீட்டைச் சார்ந்தவர்கள்” என்று கூறினார்கள்.
எனவே இவர்களும், இவர்களின் பரம்பரையில் தோன்றிய அனைவரும் நபி ஸல் அவர்களின் வீட்டைச்சார்ந்தவர்கள் என்பதில் ஐயமில்லை.
எனவேதான் நபி ஸல் அவர்களின் வீட்டைச் சார்ந்தவர்களை நேசிக்கும் பொழுது அல்லாஹ்வின் அருளும் நபி ஸல் அவர்களின் பறகத்தும் கிடைக்கும்.
நபி ஸல் அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்.
أحبوا أهل بيتي لحبي
“எனது நேசத்திற்காக எனது குடும்பத்தை நேசியுங்கள்.”
இவர்களின் பரம்பரையில் தோன்றியவர்கள்தான் ரஜப் மாதம் உலகெங்கும் நினைவு கூரப்படக்கூடிய இமாமுனா ஜஃபர் அஸ்ஸாதிக் றழி அவர்கள்.
இவர்கள் தந்தை வழியில் அமீருல்முஃமினீன் செய்யிதுனா அலீஇப்னு அபீதாலிப் (கர்ரமல்லாஹு வஜ்ஹஹு) அன்னவர்களின் பரம்பரையைச் சார்ந்தவர்களாகவும், தாய் வழியில் அமீருல்முஃமினீன் செய்யிதுனா அபூபக்கர் சித்தீக் (றழீ) அவர்களின் பரம்பரையை சார்ந்தவர்களாகவும் திகழ்கின்றார்கள்.
இமாமுனா ஜஃபர் அஸ்ஸாதிக் றழி அவர்கள் ஹிஜ்ரீ 80 ம் ஆண்டு மதீனா முனவ்வராவில் பிறந்தார்கள்.

தந்தை வழியில் இவர்களின் பரம்பரை.

இமாமுனா ஜஃபர் அஸ்ஸாதிக் றழி அவர்கள்
இவர்களின் தந்தை இமாமுனா முஹம்மத் அல் பாகிர் (ரழி)
இவர்களின் தந்தை இமாமுனா ஸைனுல் ஆபிதீன் ரழி அவர்கள்.
இவர்களின் தந்தை ஷஹீதே கர்பலா இமாமுனா ஹுஸைன் (ரழி) அவர்கள்.
இவர்களின் தந்தை அமீருல்முஃமினீன் செய்யிதுனா அலீஇப்னு அபீதாலிப். கர்ரமல்லாஹு வஜ்ஹஹு அவர்கள்.
தாய் வழியில் இவர்களின் பரம்பரை
இமாமுனா ஜஃபர் அஸ்ஸாதிக் (ரழி) அவர்கள்.
இவர்களின் தாய் ஸெய்யிததுனா உம்மு பர்வா (ரழி) அவர்கள்.
இவர்களின் தந்தை ஸெய்யிதுனா காசிம் (ரழி) அவர்கள்.
இவர்களின் தந்தை ஸெய்யிதுனா முஹம்மத் (ரழி) அவர்கள்.
இவர்களின் தந்தை அமீருல்முஃமினீன் ஸெய்யிதுனா அபூபக்கர் சித்தீக் (ரழி) அவர்கள்.
தந்தை வழியிலும் தாய் வழியிலும் உயர் அருள் வம்சத்தைச் சேர்ந்த, இஸ்லாத்திற்காக தங்களை அர்ப்பணித்த இமாமுனா ஜஃபர் அஸ்ஸாதிக் (ரழி) அவர்களை ரஜப் மாதத்தில் நினைவு கூருவதில் பெரு மகிழ்ச்சியடைகின்றோம்.
அவர்களின் பொருட்டைக் கொண்டு அல்லாஹுதஆலா எங்களின் ஆன்மீகத் தந்தை, காதிரிய்யஹ் நக்ஷ்பந்திய்யஹ் தரீக்கஹ்களின் ஷெய்ஹு நாயகம் அதி சங்கைக்கும் மரியாதைக்குமுரிய ஷெய்ஹுனா கலாநிதி அல் ஆலிமுல் பாழில், அல் ஆரிப்பில்லாஹ் அல்ஹாஜ் A. அப்துர் றஊப் (மிஸ்பாஹீ பஹ்ஜீ) (தால உம்றுஹு) அன்னவர்களின் வாழ்நாளை பூரண உடல் ஆரோக்கியத்துடன் நீளமாக்கி வைப்பானாக. ஆமீன்
இமாமுனா ஜஃபர் அஸ்ஸாதிக் (ரழி) அவர்கள் அபூ அப்தில்லாஹ், அபூ இஸ்மாயீல் போன்ற புனைப்பெயர்கள் கொண்டும், அஸ்ஸாதிக் (உண்மையாளர்),அல்பாழில் (சிறப்புக்குரியவர்), அத்தாஹிர் (துய்மையானவர்) போன்ற பட்டப் பெயர்கள் கொண்டு அழைக்கப்படுகின்றார்கள். இது அந்தஸ்தில் இவர்கள் உயர்ந்தவர்கள் என்பதை பறை சாற்றுகிறது.
இவற்றில் ”அஸ்ஸாதிக்” என்ற பட்டப் பெயர் கொண்டு இவர்கள் பிரசித்தி பெற்ற காரணத்தினால்தான் ஜஃபர் அஸ்ஸாதிக் என்று இவர்கள் அழைக்கப்படுகின்றார்கள்.
இமாமுனா ஜஃபர் அஸ்ஸாதிக் (ரழி) அவர்கள் விஷேட தன்மை பெற்றவர்களாக விளங்கினார்கள். அதாவது அவர்கள் இறைவனிடத்தில் எதைக் கேட்டு பிரார்த்தனை செய்கிறார்களோ அந்தப்பிரார்த்தனை முடிவதற்குள் அந்த வஸ்து அவர்களின் முன்னேயிருக்கும். இது இறைவன் இவர்களுக்கு வழங்கிய தனிச் சிறப்பம்சமாகும். இதனால் இவர்கள் (முஜாபுத்தஃவஹ்) “பிரார்த்தனை பதிலளிக்கப்படக்கூடியவர்கள்” என்று அழைக்கப்படுகின்றார்கள்.
மூத்த ஸஹாபாக்களில் நபீ ஸல் அவர்களுக்கு பல வருடங்கள் பணி புரிந்த செய்யிதுனா அனஸ் இப்னு மாலிக், செய்யிதுனா ஸஹ்ல் இப்னு ஸஃத் (ரழியல்லாஹு அன்ஹுமா) ஆகியோரை தங்கள் வாழ்வில் சந்தித்திருக்கிறார்கள் இமாமுனா ஜஃபர் அஸ்ஸாதிக் (றழி) அவர்கள்.
இமாமுனா முஹம்மத் இப்னு இத்ரீஷ் அஷ்ஷாபிஈ (ரழி) அவர்களிடம் இமாமுனா ஜஃபர் அஸ்ஸாதிக் (ரழி) அவர்களைப்பற்றி என்ன நினைக்கின்றீர்கள்? என்று வினவப்பட்டது. அதற்கு அவர்கள் “இமாம் ஜஃபர் அஸ்ஸாதிக் (ரழி) அவர்கள் நம்பிக்கைக்குரியவர்கள்” என்று பதில் கூறினார்கள்.
செய்யிதுனா அபூ ஹாதிம் அர்றாஸீ ரழீ அவர்களிடம் இமாமுனா ஜஃபர் அஸ்ஸாதிக் (றழி) அவர்கள் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு “அவர்கள் போன்றவர்கள் பற்றி கேட்கப்படக்கூடாது” என்று பதிலளித்தார்கள்.
இமாமுனா ஜஃபர் அஸ்ஸாதிக் (ரழி) அவர்கள் கூறிய கருத்துக்களில் சில…….
1. செலவு செய்பவன் ஒரு போதும் ஏழையாவதில்லை.
2. ஸதகா கொடுப்பதைக் கொண்டு உணவு இறங்குவதை எதிர்பாருங்கள்.
3. ஸகாத்தைக் கொண்டு உங்களது சொத்துக்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
4. அல்லாஹுதஆலா உனக்கு அருள் புரிந்தால் அந்த அருள் நிலைத்திருக்க வேண்டுமென்று நீ விரும்பினால் இறைவனை அதிகம் புகழ்ந்து கொள். அவனுக்கு அதிகம் நன்றி செய்.
5. உணவு உனக்கு தாமதமாகக்கிடைத்தால் இறைவனிடம் நீ செய்த பாவங்களுக்காக மன்னிப்புத்தேடு.
இமாமுனா ஜஃபர் அஸ்ஸாதிக் (ரழி) அவர்கள் தனது மகன் மூசல் காழிம் ரழி அவர்களுக்கு பின்வருமாறு உபதேசம் செய்தார்கள்.
1. எனது சின்ன மகனே! எனது வஸிய்யத்தை நீ ஏற்றுக் கொள். நான் சொல்வதைப் பாதுகாத்துக்கொள். அதை நீ பாதுகாத்தால் சீதேவியாக வாழ்வாய். புகழப்பட்டவனாக மரணிப்பாய்.
2. எனது சின்ன மகனே! இறைவன் தனக்கு வழங்கியதை போதும் என்ற மனப்பாங்குடன் எவன் பொருந்திக் கொண்டானோ அவனே செல்வந்தன். பிறருடைய கையிலிருப்பதளவில் தன் பார்வையை எவன் செலுத்துகின்றானோ அவன் ஏழையாகவே மரணிப்பான். அல்லாஹ் தனக்கு வழங்கியதை எவன் பொருந்திக் கொள்ளவில்லையோ அல்லாஹ்வை அவனது தீர்ப்பில் இவன் சந்தேகம் கொண்டுவிட்டான்.
3. எனது சின்ன மகனே! பிறருடைய குறையை யார் வெளிப்படுத்துகின்றானோ அவனுடைய குறையை அல்லாஹ் வெளிப்படுத்துவான்.
4. எனது சின்ன மகனே! பிறர் விழ வேண்டுமென்பதற்காக எவன் குழி தோண்டுகின்றானோ அவனே அதில் விழுவான்.
5. எனது சின்ன மகனே!உனக்கு சாதகமாக இருந்தாலும் சரி, பாதகமாக இருந்தாலும் சரி உண்மையையே பேசு.
இமாமுனா ஜஃபர் அஸ்ஸாதிக் (ரழி) அவர்கள் நபீ ஸல் அன்னவர்களின் குடும்பத்தில் தோன்றியவர்களில் அதிக மார்க்க சட்டங்களை அறிந்தவர்களாகவும், இறை ஞானமிக்கவராகவும் விளங்கினார்கள்.
இமாமுனா ஜஃபர் அஸ்ஸாதிக் (ரழி) அவர்கள் தங்களின் 68வது வயதில் ஹிஜ்ரி 148ம் ஆண்டு எதிரிகளால் நஞ்சூட்டப்பட்டு இறை சமூகம் சென்றடைந்தார்கள். ரஜப் பிறை 22 அவர்கள் இறை சமூகம் சென்ற தினமாகும். அவர்களின் பாட்டனார் தந்தை போன்றோருடன் ஜன்னதுல் பகீஇல் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள்.
யா அல்லாஹ்! இமாமுனா ஜஃபர் அஸ்ஸாதிக் (ரழி) அவர்களின் பொருட்டைக் கொண்டும் எங்களது பாவங்களை மன்னிப்பாயாக! எங்களின் தேவைகளை நிறை வேற்றி வைப்பாயாக! எங்களின் ஷெய்ஹு மிஸ்பாஹி நாயகம் அன்னவர்களின் வாழ்நாளை பூரண உடல் ஆரோக்கியத்துடன் நீளமாக்கி வைப்பாயாக.
ஆமீன்.

By

Related Post