செவ்வாய் கிரகத்தில் கோடை காலத்தில் தண்ணீர் திரவ நிலையில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக நாசா அறிவித்துள்ளது.
இதனால் அங்கு மனிதர்கள் வசிக்கக் கூடிய சூழ்நிலை குறித்த சாத்தியக்கூறுகள் தொடர்பான ஆய்வுகளை விஞ்ஞானிகள் முடுக்கி விடவுள்ளனர். மார்ஸ் ரீகனயனஸன்ஸ் ஆர்பிட்டர் (எம்.ஆர்.ஓ) மூலம் கிடைத்துள்ள தகவல்களை ஆய்வு செய்து பார்த்து இந்த முடிவுக்கு நாசா வந்துள்ளது.
முன்பு எப்படி அபரிமிதமாக அங்கு தண்ணீர் இருந்ததோ அதேபோல இப்போதும் அங்கு தண்ணீர் இருப்பதாக கூறுகிறது நாசா. செவ்வாயில் உள்ள மலைப் பகுதிகளிலும், பள்ளத்தாக்குகளிலும், தரைப்பரப்பிலும் தண்ணீர் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தத் தண்ணீர் குளிர்காலத்தில் உறைந்து போய்க் காணப்படுகிறது. வெயில் காலத்தில் திரவ நிலைக்கு மாறி ஓடுகிறது. இதுகுறித்து தகவல்களை நேற்று வாஷிங்டனில் வெளியிட்டுப் பேசினார் நாசாவின் அறிவியல் இயக்குநரகத்தின் உதவி நிர்வாகியும், விண்வெளி வீரருமான ஜான் கிரின்ஸ்பெல்ட்.
அவர் கூறுகையில், நீண்ட காலமாக நாம் யூகங்களின் அடிப்படையில் சந்தேகப்பட்டு வந்ததை தற்போது அறிவியல் பூர்வமாக உறுதி செய்துள்ளோம். தண்ணீர் இருக்கிறதா என்ற நீண்ட கால தேடுதலுக்கு முடிவு கண்டுள்ளோம். அங்கு தண்ணீர் உள்ளது.
இது ஒரு மிக முக்கியமான முன்னேற்றம். இன்றளவும் செவ்வாயின் தரையில் தண்ணீர் ஓடிக் கொண்டிருக்கிறது என்பது உறுதியாகியுள்ளது. இந்தத் தண்ணீரானது குளிர்காலத்தில் உறை நிலையில் உள்ளது. இவை ஹைட்ரஜன் மூலக்கூறுகளாக மாறிய நிலையில் கண்டறியப்பட்டுள்ளன.
இந்த உறைநிலை தண்ணீரானது உப்புப் படிவத்துடன் காணப்படுகிறது. செவ்வாயின் பல பரப்புகளிலும் தண்ணீர் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.
நீர் ஆதாரம் கண்டறியப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அங்கு உயிரினங்கள் வசிக்கக் கூடிய சாத்தியக் கூறுகள், உயிர் வாழத் தேவையான பிற அம்சங்கள் உள்ளதா என்பது குறித்த ஆய்வுகளை விஞ்ஞானிகள் முடுக்கி விட்டுள்ளனர்.