திகாமடுல்ல மாவட்டத்தில் விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் முறைமையால் தவிர்க்க முடியாத ஒரு ஆபத்து எப்போதுமே இருக்கும். மாவட்டத்தின் பல்லின மக்கள் விகிதாசாரத்துக்கு சமனான பிரதிநிதித்துவங்களை பெற்றுக்கொள்வதில் சங்கடங்களுண்டு.
1989ல் நடைபெற்ற பொதுத்தேர்தலிலும் இந்த சவாலை எதிர்கொள்ளவே, வாக்குகளை ஓரணியில் திரட்ட மர்ஹூம் அஷ்ரஃப் முயற்சி செய்தார். மர்ஹூம்களான A.R.மன்சூர், B.A.மஜீத் போன்ற செல்வாக்கு மிக்க அரசியல் தலைமைகள், போட்டியிடாமல் தவிர்ந்துகொள்ள வேண்டும் என்று வியூகம் வகுத்தார். என்றாலும், அந்த வியூகத்தையும் மீறி, தேர்தல் முடிவு எதிர்பார்ப்புக்கு மாற்றமாக வெளியானது.
அதன் பின்னரான தேர்தல்களில், மர்ஹூம் அஷ்ரஃப் அவர்களால் ஸ்தாபிக்கப்பட்ட கட்சி/கள் அதிகூடிய ஆசனங்களையே பெற்றது. கட்சியால் அடையாளப்படுத்தப்படும் மூன்று வேட்பாளர்களுக்கு, விருப்பு வாக்கு வழங்கும் சாதாரண பொறிமுறைதான் மர்ஹூம் அஷ்ரஃபின் காலத்திருந்து பின்பற்றப்பட்டது. மூன்று தொகுதிகளுக்கும் மூன்று உறுப்பினர்களை அடையாளம் காட்டுவதே மர்ஹூம் அஷ்ரஃபின் வழிமுறை.
ஒரு தடவை அந்த எண்ணிக்கை நான்காகியது. அம்பாறை தொகுதிக்கும் ஒரு எம்பி கிட்டியது. மர்ஹூம் அஷ்ரஃபின் அரசியல் வழிகாட்டல் மீது இன,மத பேதங்களுக்கு அப்பால், மக்களுக்கு இருந்த நம்பிக்கையின் காரணமாக, தொகுதிகளில் இருந்த ஏனைய ஊர்கள், ஊருக்கொரு எம்.பியென்ற உளவியலுக்குள் சிக்கவில்லை.
ஹக்கீமின் தலைமைத்துவ பலயீனமும், அவரால் திகாமடுல்ல முஸ்லிம் மக்கள் மீது தேர்தல்களினூடாக திணிக்கப்பட்ட மூன்று தேர்வுகளும், கடந்த இருபது வருடங்களிலும் கையாலாகாதவர்களாய் இருந்ததன் காரணமாக, ஒவ்வொரு ஊர்களும் தமக்கென தனியான எம்.பி வேண்டும் என்ற மன நிலைக்கு தள்ளப்பட்டது. இந்த சவாலை சமாளிக்க ஒரே தொகுதியில் மூன்று வேட்பாளர்களை ஹகீம் களமிறக்கியுள்ளார்.
தனது கட்சியில் மரச்சின்னத்தில் களமிறங்கியிருந்தால், ஒவ்வொரு தொகுதிக்கும் மூன்று வேட்பாளர்களை நிறுத்துவதாலும் எந்தப் பாதிப்பும் வரப்போவதில்லை. ஆனால், ஒரு மாற்றுக்கட்சியின் சின்னத்தில், மூன்று வேட்பாளர்களுக்கு மேல் களமிறக்குவது எவ்வளவு ஆபத்தானது என்பதை ஹக்கீம் அறிந்திராமலிருக்க வாய்ப்பில்லை. என்றாலும், களநிலவரம் ஒவ்வொரு ஊருக்கும் வேட்பாளர்களை நிறுத்த ஹக்கீமை நிர்பந்தித்துள்ளது.
கடந்த இருபது வருடங்களில், கரையோர தொகுதிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களின் அசமந்தப் போக்கும், இயலாமையும் மாற்றத்தின் தேவையை வற்புறுத்துகின்றது. இயலாமை நிரூபிக்கப்பட்ட பழையவர்களை புறக்கணித்துவிட்டு, துடிப்பான புதிய ஆளுமைகள் மூவரை திகாமடுல்ல மாவட்டத்தில் களமிறக்கி, வெற்றிக்கான வியூகத்தை வகுக்க திராணியில்லாத தலைமையாக ஹக்கீமை குறைகாணுவதை விட்டுவிட்டு, சொந்த சின்னத்தில், பத்து வேட்பாளர்களை களமிறக்கி, ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸை பிழை காண்பது இனவாதம், பிரதேசவாதங்களைவிட கொடிய இயலாமைவாதமாகும்.
நிர்பந்தத்தால் ஆறு வேட்பாளர்களை நிறுத்திவிட்டு, மாற்றத்துக்காக வாக்களிக்கவுள்ள மக்களை குற்றவாளிகளாக்க எத்தனிப்பது கபட நாடகம். மூன்று எம்.பி கோசத்தை மட்டும் முன்னெடுத்து, திகாமடுல்லையை இதுவரை காவுகொண்ட சூழ்ச்சி, இம்முறை தடுக்கப்பட்டுள்ளது. காலத்தின் நற்சமிக்கை இது.
எம்.பிக்களின் எண்ணிக்கையை போலவே, அவர்களின் வினைத்திறனும் சமூக விசுவாசமும் எதிர்வரும் காலங்களில் முக்கியமாக கவனத்தில்கொள்ளப்பட வேண்டியவை.
எதிர்க்கட்சியிலிருந்து கொண்டுதான், அஷ்ரஃப் 90 களில் அம்பாறையையும் சேர்த்து ஆண்டார்.
இனியொரு அஷ்ரஃபை காணமுடியாது
ஆனால், அகில இலங்கை மக்கள் காங்கிரஸை ஒன்றுபட்டு, ஆதரித்து, மூன்று தொகுதிகளுக்கும் வினைத்திறனுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுத்து, சேதாரமில்லாத மாற்றத்துக்கு கைகோர்போமாக!
-வஃபா பாறுக்-