சேயா கொலை தொடர்பான வழக்கு நேற்று மினுவன்கொட மஜிஸ்திரேட் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
வழக்கு விசாரணைகளை உயர் நீதிமன்றிற்கு மாற்றுமாறு புலனாய்வுப் பிரிவினர் கோரியிருந்தனர்.
இந்த வழக்கு எதிர்வரும் 16ம் திகதி மீளவும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதவான் டி.ஏ.ருவன் பத்திரண அறிவித்துள்ளார்.
சேயா கொலை தொடர்பிலான முழு விசாரணைகளையும் நடத்தி சகல ஆவணங்களும் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு கடந்த 30ம் திகதி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக புலனாய்வு பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்ட பாடசாலை மாணவரின் மடிக் கணனியில் காணப்பட்ட தகவல்கள் குறித்து, மொரட்டுவ பல்கலைக்கழகம் நடத்திய விசாரணை அறிக்கையும் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு விசாரணைகளை உயர் நீதிமன்றிற்கு மாற்றுவது குறித்து நீதவான் நேற்று எவ்வித அறிவிப்பினையும் விடுக்கவில்லை. அடுத்த வழக்குத் தவணையில் இது குறித்து அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.