சேலை உடுத்த ஓநாய்
ஆழக் கடலிலே ஓலமிடும் ஒலி
‘ஐநா’ உனக்கின்று கேட்கிறதா…?
நாடி நரம்பெங்கும் விம்மி புடைக்குது
நாமும் வெடிகுண்டை தூக்கிடவா….?
காலை உடைக்கிறான் ஆளை முடிக்கிறான்
மூளை எடுத்தவன் உண்ணுகிறான்
வாலைப் பிடிக்கவா..? வாழ்வை முடிக்கவா..?
வாளைப் பிடித்து நாம் வாழ்ந்திடவா…?
பாலை வனம்போல மாறும் மனங்களால்
பாழும் கிணற்றிலே தள்ளப்பட்டோம்
சேலை உடுத்தந்த ஓநாய் ‘விராதி’னால்
மூலை முடுக்கெங்கும் கொல்லப்பட்டோம்…
ஏழை எமக்கின்று வாழவழிகொடு
ஏக இறைவனே கெஞ்சுகிறோம்
நாளை விடியுமா..? நாளை முடியுமா..?
நாடே துரத்தினால் என்ன செய்வோம்
கூறு கெட்ட எங்கள் அரபுக் குதிரைகள்
குள்ள நரிகளின் பொதிசுமக்க
யாரு கெட்டாலென்ன கவலை எமக்கில்லை
என்ற மனங்களோ குதூகலிக்க
சாந்த நெறிதந்த புத்தரின் போதனை
ரத்தத்தில் மூழ்கியே தத்தளிக்க
காந்தியம் பேசியே கயவர்கள் பர்மாவில்
காடைத்தனம் செய்து கொக்கரிக்க..
ஆழக் கடலிலே ஓலமிடும் ஒலி
‘ஐநா’ உனக்கின்று கேட்கிறதா…?
நாடி நரம்பெங்கும் விம்மி புடைக்குது
நாமும் வெடிகுண்டை தூக்கிடவா….?
– கவிஞர் அஸ்மின் –