Breaking
Sat. Jan 11th, 2025

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரையும் விடுவித்து கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி சி.ஆர்.குமாரசாமி தீர்ப்பு வழங்கினார்.

மேலும், பெங்களூரு சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

ஜெயலலிதா மேல்முறையீட்டு வழக்கு

வழக்கு பின்னணி:

1991-96 காலக்கட்டத்தில் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மற்றும் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக ரூ.66.65 கோடி சொத்துக் குவித்ததாக வழக்கு தொடரப்பட்டது. 18 ஆண்டுகளாக நடைபெற்ற இவ்வழக்கை விசாரித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி’குன்ஹா கடந்த செப்டம்பர் 27-ம் தேதி நால்வருக்கும் தலா 4 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தார். மேலும் ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி அபராதமும் மற்ற மூவருக்கும் தலா ரூ. 10 கோடி அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேரும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் கடந்த செப்டம்பர் 29-ம் தேதி மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தனர்.

இதனிடையே நான்கு பேருக்கும் ஜாமீன் வழங்கிய உச்ச நீதிமன்றம், ‘மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை மூன்று மாதங்களுக்குள் முடிக்க வேண்டும்’ என கால வரையறை நிர்ணயித்தது.

இதையடுத்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் சிறப்பு அமர்வு அமைக்கப்பட்டு சி.ஆர்.குமாரசாமி நீதிபதியாக நியமிக்கப்பட்டார். ஜனவரி 5-ம் தேதி தொடங்கிய‌ மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை 41 நாட்களில் நிறைவுபெற்றது.

இதைத் தொடர்ந்து கடந்த மார்ச் 11-ல் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி இன்று (மே-11) தீர்ப்பு வழங்கப்பட்டது. ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் விடுவிக்கப்படுவதாக தீர்ப்பு வழங்கப்பட்டது.

Related Post