சங்கைக்குரிய அமரர் மாதுலுவாவே சோபித தேரரின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார். மறைந்த சங்கைக்குரிய மாதுலுவாவே சோபிததேரரின் இறுதி நிகழ்வுகள் நேற்று (வியாழக்கிழமை) இலங்கை நாடாளுமன்றத் மைதானத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு இரங்கள் உரையாற்றுகையிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதன்போது அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,
“இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக சாதாரண பிரஜை ஒருவருக்காக அரச மரியாதையுடன் கூடிய இறுதிக் கிரியைகள் நடத்தப்படுகின்றது. சோபிததேரர் ஏதேனும் ஓர் பௌத்தபீடத்தின் பீடாதிபதியோ, கிறிஸ்தவ, இஸ்லாம் இந்துமதத் தலைவர்களில் ஒருவரோ அல்லது அரச தலைவரோ கிடையாது.
அவர் தொழிற்சங்கத் தலைவரோ, மிகப் பெரிய செல்வந்தரோ அல்லது முக்கிய பிரமுகரோ கிடையாது. அவர் இந்த நாட்டின் ஒரு குடிமகன், கோட்டை நாகவிகாரையின் விகாராதிபதியான அவர் பல கருத்துக்களினால் மக்களினதும், சமூகங்களினதும் மனங்களை வென்று இன்று ஒரு மிகச்சிறந்த மனிதராக திகழ்கின்றார்.
அரசியல் பேதமோ, இனத மத பேதங்களோ இன்றி நாட்டையும், நாட்டு மக்களையும், சமூகத்தையும் சீர்ப்படுத்துவதில் அதீத கரிசனை கொண்டு அர்ப்பணிப்புடன் செயற்பட்டார். நோய்வாய்ப்பட்டு முடியாத நிலையில் இருந்த காலங்களிலும் நாட்டின் நலன் பற்றியே சிந்தித்து வந்துடன், நல்லாட்சிக்காவும், மக்களின் வாழ்விற்காகவும் பாடுபட்டார்.
இந்நிலையில் அவருடைய கனவான நியாயமான சமூகத்தை கட்டியெழுப்பும் முயற்சிகள் வெறும் வார்த்தைகளுக்கு மட்டும் வரையறுக்கப்படாது நடைமுறையில் அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். அதற்காக நான் அர்ப்பணிப்புடன் செயற்படுவேன். அவர் எம்மைவிட்டு பிரிந்து சென்றாலும் அவருடைய எண்ணங்கள், எதிர்ப்பார்ப்புக்கள், கனவுகள் என்பன நல்லாட்சி அரசின் கைகளுக்கு விட்டுச் சென்றுள்ளார்” என்றும் கூறினார்.