இலங்கையின் அரசியலில் மாற்றமொன்று ஏற்படுவதன் மூலம் சிறுபான்மை சமூகங்கள் தமது அரசியல் அந்தஸ்த்தையும், பாதுகாப்பினையும் தக்க வைத்துக் கொள்ளலாம் என்ற சிந்தனையில் செயற்பட்டு வந்த சோபித தேரரின் இறப்பு, இலங்கையில் தற்போதைய சூழலில் ஈடுசெய்யப்பட முடியாததொன்று என்று அகில .இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிஷாத் பதியுதீன் வெளியிட்டுள்ள இறங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
மாதுலுவாவ சோபித்த தேரரின் மறைவு தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது –
ஜனவரி 8 ஆம் திகதி அரசியல் மாற்றம் ஏற்பட்டது. இந்த மாற்றத்திற்கான நபராக அமரர் சோபித தேரர் அவர்களும் பிரதானமாக பேசப்படக் கூடியவராக இருந்து வந்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஆட்சியில் அமர்த்துவதற்கு பல்வேறு அரசியல் தலைவர்களுடன் பேச்சுக்களை நடத்தியவர், அத்தோடு மற்றும் நின்றுவிடாமல் நிறைவேற்று ஜனாதிபதி முறைமை தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய திருத்தத்திற்கு மிகவும் வலு சேர்க்கப்பட்ட ஒருவராக அமரர் சோபித தேரர் அமைந்திருந்தார்.
இன ரீதியான பிரச்சினைகளின்போது சமூகங்களின் பாதுகாப்பு தொடர்பில் பல சந்தர்ப்பங்களில் குரல் எழுப்பியதுடன், பௌத்த மத செயற்பாடுகளை கடை பிடிக்கும் ஒருவராகவும் அவரை காணமுடிந்தது.
குறிப்பாக நாட்டின் எதிர்காலம் தொடர்பிலும், போதையற்ற இளைஞர் சமூகத்தினை உருவாக்குவதற்கு தேவையான கருத்துக்களை பகிரங்கமாக வெளியிட்டு வந்த ஒருவராக அமரர் சோபித தேரரை இனம் காண முடியும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் றிஷாத் பதியுதீன்,அவரது பிரிவு தொடர்பில் தமது ஆழ்ந்த கவலையினையும் வெளியிட்டுள்ளதாகவும் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்