க்லைபோசெட் எனும் களைநாசினியை தடைசெய்தமையால் சோளஉற்பத்தியில் 20 வீதம் வீழ்ச்சி ஏற்படலாம் என விவசாய அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
யாரையும் பழிவாங்குவதற்காக இந்த களைநாசினியை தடை செய்யவில்லை எனவும் குறித்த களைநாசினியால் ஏற்படுகின்ற பாதிப்பை கருத்திற்கொண்டே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்கத்தின்போது நிவாரண அடிப்படையில் வழங்குவதற்காக கொண்டுவரப்பட்ட உரத்தை 1200- 1300 ரூபாய்க்கே விற்பனை செய்ய முடியும் எனவும் சில வர்த்தகர்கள் அதனை 3000-3500 ரூபாய்க்கு விற்பனை செய்வதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் அது சட்டவிரோத விற்பனை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை,1200-1300 ரூபாய்க்கு அதிகமாக விலையை அதிகரித்து விற்பனை செய்கின்ற வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
நிவாரண உரத்தை கொண்டுவந்த நிறுவனங்கள் நிவாரண விலைக்கு வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ள போதிலும் அவற்றை மீறி வர்த்தகர்கள் ஊடாக விற்பனை செய்ய முயற்சிக்கக் கூடாது அன அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நிவாரண உரத்தொகை நிறைவடைந்த பின்னர் வரவு செலவுத் திட்டத்தில் தெரிவிக்கப்பட்ட விதத்தில் மானிய உரத்திற்குப் பதிலாக பணம் வழங்கப்படும்.
இதேவேளை அன்னாசி, பப்பாளி, வாழை போன்ற பயிர்களுக்கு நிவாரண உர மானியம் கிடைக்கும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
விவசாயிகளுக்கு கமநல சேவைகள் மத்திய நிலையத்தில் பதிவு செய்ய முடியும் என்பதோடு, இணையத்தளம் மூலமாக பதிவு செய்ய முடியும் என்று கூறப்படுவது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும் அது நகைச்சுவையாக கதை என்றும் அவர் தெரிவித்தார்.