Breaking
Fri. Nov 22nd, 2024

நபி ஜக்கரிய்யா (அலை) அவர்களுக்கு நீண்ட காலமாகக் குழந்தை இல்லை. தன்னுடைய திருப்பணியைத் தொடர்வதற்குத் தனக்கு ஒரு வாரிசு வேண்டுமென்று விரும்பினார்கள் ஜக்கரிய்யா (அலை).

அல்லாஹ்விடம் சிரம் தாழ்த்தி, தாழ்ந்த குரலில் மிக உருக்கமாக அழுது வாரிசு வேண்டி பிரார்த்தித்தார்கள். “அல்லாஹ்! மனதால் உறுதியுடன் இருக்கும் எனக்கு, தலைமுடிகள் நரைத்துவிட்டன, எனது எலும்புகள் பலஹீனமடைந்துவிட்டன. மனதில் இருக்கும் தெம்பு உடலில் இல்லை.  எனக்குப் பின்னர் என் உறவினர்கள் வழி்கெட்டு விடுவார்களோவென்று நான் அஞ்சுகிறேன். நான் செய்து கொண்டிருக்கும் போதனைகளைத் தொடர, மக்களுக்கு நல்வழி் காட்ட எனக்கு வாரிசை ஏற்படுத்தித் தருவாயாக” என்று பிரார்த்தித்தார்கள்.

இறைவன் ஜக்கரிய்யாவின் (அலை) பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டான். ஜக்கரியாவிற்குப் பேரானந்தம். ஆனால் தான் முதுமையின் தள்ளாத பருவத்தில் இருக்கும் நிலையில் தன் மனைவியும் மலடாக முதுமையில் இருக்கும்போது எவ்வாறு இது சாத்தியமென்று வியந்தார்.
அதற்கு இறைவன் “இது எனக்கு மிகவும் சுலபமானது, நீர் ஒரு பொருளாக இல்லாதிருந்தபோது, நானே உம்மைப் படைத்தேன்” என்று நினைவுபடுத்தினான்.

இறைவன் ஜக்கரிய்யாவிற்கு, ” `யஹ்யா` எனும் பெயருள்ள ஆண் மகன் பிறப்பான். இதற்கு முன்னர் இப்பெயர் கொண்டவர் எவருமில்லை. அவர் அல்லாஹ்வின் வார்த்தையை மெய்ப்பிப்பவராகவும், கண்ணியமுடையவராகவும், ஒழுக்க நெறி கொண்ட தூயவராகவும், நல்லோர்களிலிருந்தே நபியாகவும் இருப்பார்” என்றும் அறிவித்தான்.

“என் இறைவா! இதற்கான அறிகுறியை எனக்குக் கொடுத்தருள்வாயாக!” என்று ஜக்கரிய்யா கேட்டார்கள். “நல்ல உடல்நிலையிலிருக்கும் உம்மால் திடீரென மூன்று நாட்கள் பேசமுடியாது போய்விடும். காலையிலும் மாலையிலும் எல்லா நிலைகளிலும் என்னை அதிகமாகத் தியானித்துக் கொண்டிருங்கள்” என்றும் அருளினான்.

ஜக்கரிய்யா (அலை) இறைவனின் அறிகுறிக்காகக் காத்திருந்தார்கள். வெளியில் வழக்கம்போல் மக்களுக்குப் போதனைகள் செய்ய வாய் திறக்கும்போது அவர்களால் பேச முடியவில்லை. உள்ளுக்குள் பேரானந்தமடைந்த ஜக்கரிய்யா (அலை) அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தினார்கள். பேச முடியாத நிலையிலும் சைகையினால் மக்களை காலையிலும் மாலையிலும் அல்லாஹ்வைத் துதித்துப் போற்றுமாறு மக்களுக்கு உணர்த்தினார்கள்.

இறைவனின் அத்தாட்சியாக மூன்று நாட்கள் ஜக்கரிய்யா (அலை) அவர்களால் பேச முடியவில்லை. அவர்கள் இறைவனை நாள் முழுக்க வணங்கி தொழுது தியானத்தில் மூழ்கினார்கள்.

இறைவன் நாடினால் அது நடந்தேறிவிடும்.

திருக்குர்ஆன் 3:38-41, 19:2-11

By

Related Post