புத்தளம் நகர சபையின் மாதாந்த அமர்வு நேற்று (04) புத்தளம் நகர சபைத்தலைவர் அப்துல் பாயிஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இதன் போது கொழும்பிலிருந்து புத்தளத்திற்கு கொண்டுவரப்படவுள்ள கழிவகற்றல் திட்டத்திற்கு எதிரான பிரேரனை முன்வைக்கப்பட்டு விவாதம் இடம்பெற்றது.
நகர சபை உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மாவட்ட அமைப்பாளருமான அலி சப்ரி ரஹீம் இங்கு உறையாற்றுகையில்,
1963 தொடக்கம் ஆரம்பிக்கப்பட்ட அருவைக்கல்லு சீமெந்து தொழிற்சாலை வேலைத்திட்டம், 1969க்கு பிறகு பெரும் காடாக காணப்பட்ட அருவைக்கல்லு பிரதேசத்தில் இருந்து 25 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள புத்தளம் நகர்புரத்திற்கு அசாதாரண முறைகளில் அரச பணங்களை செலவு செய்து புகையிரத வீதிகளை அமைத்து, புத்தளம் நகருக்குள் கொண்டு வந்தனர்.
இது போன்ற ஒரு திட்டம் தான் கொழும்பிலிருந்து கொண்டுவரப்படவுள்ள கழிவகற்றல் திட்டம். இது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆட்சி காலத்தில் ஆரம்பிக்கப்பட்டாலும், ஆட்சி மாற்றம் காரணமாக தொடர முடியாது போனது. இதனையே தற்போதைய நல்லாட்சி அரசு தொடர்கிறது. இந்த செயற்பாடு தவறானது. இங்கு ஆளும் கட்சி, எதிர்கட்சி உறுப்பினர்கள் இணைந்து சுதந்திரமாக தமது கருத்துக்களை முன்வைக்கின்றனர்.
முன்னைய ஆட்சி காலமாக இருந்தால் கருத்துக்களை தெரிவித்து விட்டு, யாரும் வெளியில் செல்ல முடியாது. இந்த நல்லாட்சி அரசு தங்கள் உரிமைகளையும் கருத்துக்களையும் ஜனநாயகமான ரீதியில் தெரிவிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கி உள்ளதற்கான சான்றே இந்த சபையாகும்.
இங்கு மக்கள் பிரதிநிதிகள் தங்கள் கருத்துக்களில் அருவைக்காட்டில் கொட்டப்படும் குப்பை சம்பந்தமாக பல அரச அறிக்கைகளை பெற வேண்டும் என கருத்துக்கள் கூறுகின்றனர். ஆனால் கடந்த காலத்தில் புத்தளத்தில் நிறுவப்பட்டுள்ள அனல் மின் நிலையம், சீமெந்து தொழிற்சாலை போன்றன தேவையான ஆவணங்களை பெற்றே நிறுவப்பட்டுள்ளன. இருந்த போதிலும் அதனால் ஏற்படுகின்ற தாக்கங்களை நாம் அனுபவிக்கின்றோம். முழு இலங்கையிலும் டி.பி நோய்க்கான வைத்தியசாலை, தள வைத்தியசாலை அல்லது மாவட்ட வைத்தியசாலைக்கு உள்ளேயே காணப்படுகின்றன. ஆனால், புத்தளத்தில் மாத்திரம் நோயாளிகளின் அதிகரிப்பு காரணமாக டி.பி வைத்தியசாலை தனியாக காணப்படுகின்றது. இதற்கு காரணம் புத்தளத்தில் அமைக்கப்பட்டுள்ள சீமெந்து தொழிற்சாலையே.
நான் செய்திகளில் பார்கின்றேன் கொழும்பில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் கூறும் கருத்து, “கொழும்பில் சேருகின்ற குப்பைகள் கொழும்புக்கு வெளியே இருந்து வருபவர்கள் கொண்டு வருவதே” என்று, நான் அதை முற்றாக மறுக்கின்றேன். காரணம் நாங்கள் கொழும்புக்கு செல்லும் போது ஒருபோதும் இங்கு இருந்து குப்பைகளை கொண்டு செல்வதில்லை. கை நிறைய பணத்துடனேயே சென்று எங்கள் பொருளாதாரங்களை கொழும்புக்கு கொடுத்துவிட்டு கொழும்பில் இருந்து பொருட்களோடு குப்பைகளையே புத்தளத்திற்கு இதுவரை காலமும் கொண்டு வந்திருக்கின்றோம். புத்தளம் குப்பை கொட்டும் இடத்தில் பார்த்தால் கொழும்பில் இருந்து கொண்டு வரப்பட்ட குப்பைகளே காணப்படுகின்றன.
எந்த அரச அறிக்கைகளையும் ஏற்க முடியாது. அறிக்கைகளால் எந்த நன்மையும் கிடைக்க போவதில்லை. நான் கொழும்பில் இருந்து கொண்டுவரும் கழிவகற்றல் திட்டத்தை முற்றாக எதிர்கின்றேன். இந்த சபையும் எதிர்ப்பு தீர்மானத்திற்கு வரவேண்டும் என வேண்டினார்.
(ப)