மீரியபெத்தையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடுத்த ஜனவரி மாதத்திற்குள் வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்கப்படும். இது தொடர்பில் நிலவிய அனைத்து குறைபாடுகளும் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஸன யாப்பா தெரிவித்தார்.
அரசியல் மாற்றத்தின் காரணத்தினாலேயே இவ்விடயத்தில் காலதாமதம் ஏற்பட்டதாகவும் அமைச்சர் சபையில் தெரிவித்தார்.பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை கண்டி மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி எம்.பி. வேலுகுமாரினால் மீரியபெத்தை மற்றும் மலையக மண்சரிவுகள் தொடர்பாக முன்வைத்த சபை ஒத்தி வைப்பு பிரேரணைக்கு பதிலளித்து சபையில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
மீரியபெத்தை மண்சரிவினால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்தவர்களுக்கு அதனை நிர்மாணித்துக் கொடுப்பது தொடர்பில் நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களை இன்று எமது அமைச்சுடன் இணைத்துக் கொண்டு வேலைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கடந்த காலங்களில் அரசியல் மாற்றங்கள் காரணமாகவே வீடுகளை அமைப்பதில் தாமதம் ஏற்பட்டது. அத்தோடு காணியும் தேவைப்பட்டது. தற்போது 2 ஏக்கர் காணி கிடைத்துள்ளதோடு, வீடுகளை கட்டுவதற்கான பற்றாக்குறையும் தீர்க்கப்பட்டுள்ளது.
எனவே அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படும். ஜனவரியில் வீடுகள் அமைத்துக் கொடுக்கும் பணிகள் பூர்த்தியாகும். அதற்கு அரசியல் பேதங்கள் பாராது அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.
இவ்விடயத்தில் இன, மத பேதங்களுக்கு அப்பாற்பட்டே எமது செயற்பாடுகள் அமையும். அதிக மழை ஒரே இடத்தில் தொடர்வதாலும் காலநிலை மாற்றங்களினாலும் மண்சரிவுகளும் ஏற்படுகிறது.
கண்டி,பதுளை, காலி, தெனியாய, அம்பாந்தோட்டை, மாத்தளை உட்பட பல மாவட்டங்களில் மண்சரிவு ஏற்படும் அடையாளம் காணப்பட்டுள்ளது.தேசிய கட்டடங்கள் ஆய்வு நிலையம் இவ்வாறான இடங்கள் அடையாளம் கண்டுள்ளதோடு அவ்வாறான பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
உலகம் வெப்ப மயமாக்கல், காடழிப்பு, மரம் வெட்டுதல் போன்ற காரணங்களினாலும் மண்சரிவுகள் ஏற்படுகின்றன.மண்சரிவுகள் இடம்பெறும் இடங்களில் வாழும் மக்களுக்கு வேறு இடங்களில் வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட வேண்டும். அதற்காக வீடமைப்பு அமைச்சுடன் இணைந்து எதிர்காலத்தில் திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.