கடந்த ஜனவரி மாதம் 8 ஆம் திகதி அலரி மாளிகையில் தீட்டப்பட்டதாக கூறப்படும் சதி தொடர்பில், முக்கிய ஆதாரமாக கருதப்படும் அலரி மாளிகையின் சீ.சீ.ரீ.வி.கண்காணிப்பு கமரா பதிவுகள் அனைத்தும் அழிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவின் முறைப்பாட்டுக்கு அமைய பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் கீழ், குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகள் நிறைவு செய்யப்பட்டு அதன் அறிக்கை மேலதிக ஆலோசனைகளுக்காக சட்ட மா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்த விடயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
எவ்வாறாயினும் அழிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் சீ.சீ.ரி.வி. கண்காணிப்பு கமரா பதிவுகளை நவீன தொழில் நுட்பத்தைக் கொண்டு மீண்டும் பெற்றுக்கொள்ள தேவையான ஆலோசனைகள் சட்ட மா அதிபர் திணைக்களத்தினால் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு வழங்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. இந் நிலையில் இந்த சதி விவகாரம் தொடர்பிலான விசாரணைகள் குறித்து விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கடந்த ஜனாதிபதி தேர்தல் வாக்குப் பதிவுகள் இடம்பெற்ற 8 ஆம் திகதியன்று இரவு, அலரி மாளிகையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, முன்னாள் பிரதம நீதியரசர், சட்ட மா அதிபர் உள்ளிட்டவர்கள் கூடியிருக்க இராணுவ சதிப் புரட்சி ஒன்றுக்கு திட்டமிடப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு மங்கள சமரவீரவினால் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும் இந்த குற்றச்சாட்டுக்களை மஹிந்த உள்ளிட்ட அனைவரும் மறுத்துள்ள நிலையில் விசாரணை களை புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.