Breaking
Sat. Nov 23rd, 2024

– அபூஹஸ்மி –

கடந்த 25 ஆம் திகதி இடம்பெற்ற TNL ஜனஹண்ட நிழ்ச்சியில் அமைச்சர் ரிஷாட் பதிவுதீன் அவர்கள் கலந்துகொண்டு பூர்வீக கிராமங்களாக காணபட்ட  பாலக்குழி, கரடிக்குளி, மறிச்சுக்கட்டி, கொண்டச்சி, காயக்குளி தொடர்பாக வினவப்பட்ட கேள்விகளுக்கு நாட்டின் பெரும்பான்மை மக்களாகிய சிங்கள மக்கள் நன்கு தெளிவுபெறும் வகையில் வடக்கு முஸ்லிம்களின் பிரச்சினைகளை விளக்கிக்கூறினார்.

அவர் மேலும், ஜனஹண்ட நிழ்ச்சியில் பேசுகையில், நிம்மதியாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து வந்த வடக்கு முஸ்லிம்கள் புலிகளின் கொள்கைக்கு உடன்படாத ஒரே காரணத்தினால் தீவிரவாத தமிழ்ப் புலிகள்  1990 ஆம் ஆண்டு வடக்கு முஸ்லிம்களை ஆயுத முனையின் பலவந்தமாக வெளியேற்றினர். எமது மக்கள் கால் நடையாகவும் கடல் வழியாகவும் பிரயாணம் செய்து கல்பிடி, புத்தளம், அனுராதபுரம் போன்ற பகுதிகளை வந்தடைந்தார்கள். எனக்கு இன்னும் நினைவிருக்கிறது எனது உறவினர்களின் ஒருவரான எனது மாமா இரவு நேரத்தில் கடல் வழியாக போட்டில் பயணிக்கும் போது, புலிகளின் வெளியேற்ற அதிர்ச்சியை  தாங்கள் முடியாமல் மரணித்துப் போனார். அவ்வாறே இன்னுமொரு சோகம் இடம்பெற்றது. ஒரு இளம் பெண் தன் கைப்பிள்ளையை கையில் சுமந்தவளாக கடல்வழியாக நீண்ட தூரம் பயணிக்கும் போது பரிதாபாரமாக அக்குழந்தையை கடலிலே தவறவிட்டு விட்டாள். இவ்வாறு நாம் இடபெயர்ந்த போது பல்வேறு இழப்புக்களை சந்தித்தோம். உடுத்திய உடையுடனே வெளியேறினோம்.

வெளிமாவட்டங்களில் அகதிகளாக ஒலைக்குடிசைகளிலும் தகரக்கொட்டகைகளிலும் அடிப்படை வசதிகள் இன்றி வாழவேண்டிய துர்பாக்கிய சூழல் உருவானது. வறுமையின் காரணமாக எமது பிள்ளைகள் கல்வியைக் கற்பதற்கு வாய்ப்பற்றவர்களாக கூலித்தொழிலை நாடினார்கள்.  கல்வி ரீதியாக முன்னேற வேண்டும் என்ற அபிலாசைகள் இருந்த போதிலும்  நாம் கல்வி வாய்ப்பற்றவர்களாக இருந்தோம். இத்தகைய ஒரு சந்தர்ப்பத்தில்தான் படித்துக்கொண்டிருக்கின்ற போது கணிதத்தில் நான் கொண்டிருத்த தேர்ச்சியின் காரணமாக கொழும்பு சாஹிராக் கல்லூரியில் கற்பதற்கான புலமைப்பரிசில் கிடைக்கப்பெற்று அங்கு கல்வியை பூர்த்தி செய்து உயர்கவிக்கான வாய்ப்பையும் பெற்றுக்கொண்டேன்.

பழமையான வரலாற்றையும் பண்பாட்டையும் கொண்ட மன்னார் முசலி மறிச்சுக்கட்டி மக்கள் கடந்த இருபத்தி ஐந்து வருட கால அகதி வாழ்கையின் காரணாமாக இன்று தங்களது சொந்த கிராமத்தையே இழக்கின்ற தருணத்தில் உள்ளார்கள். ஆயிரத்தி எட்டுநூறுகளில் இருந்து முஸ்லிம்கள் வாழ்ந்துவந்த இந்தப் பிரதேசம் தற்போது வனாந்திரமாக பிரகடனப்படுத்தப் பட்டுள்ளதாக அறிய முடிகிறது. ஒரு இடம் நீண்ட காலம் பயன்படுத்தப்படாமல் உள்ள போது காடு வளர்வது இயற்கை சுபாவம். இந்த பூர்வீகக் கிராமங்களும் இதற்கு விதிவிலக்கன்று.

அதேநேரம் மரிச்சுக்கட்டியை வனாந்திரமாக அரசாங்கம் அறிவித்த 2012ஆம் ஆண்டு  காலப்பகுதியிலேயே தான் அரசாங்கத்தின் அனுமதியுடன் இம்மக்களுக்கான புதிய குடியிருப்புக் காணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.

அவ்வாறே இரண்டு நாட்களுக்கு முன்பு சமூக ஊடகத்தில் ஒரு சூழலியலாளர் மரிச்சுக்கட்டியில் 20 காட்டு யானைகள் கொல்லப்பட்டுள்ளதாக பழிசுமத்தியுள்ளார். உண்மையில் மறிச்சுக்கட்டி கரடிக்குளி பாலக்குழி முஸ்லிம்கள் யானைகள் செறிந்து வாழும் காட்டில் பிறந்து வளர்ந்து அங்கே வாழ்ந்து வந்தவர்கள். அதனால் அவர்களுக்கு யானை என்பது ஒரு சவால் அல்ல. (வரலாற்று தீதியாக முஸ்லிம்கள் இப்பிரதேசங்களில் யானை பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டமையும் தலதா மாளிகைக்கு யானை அன்பளிப்புச் செய்யப்பட்டதாகவும் வரலாறு உள்ளது).

உண்மையில் மறிச்சுக்கட்டியில் முஸ்லிம்கள் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்துவந்துள்ளார்கள். வியாயடிக் குளத்தை அண்டிய பழமைக் குளக் குடியேற்றமாகவே வரலாற்று ரீதியாக மறிச்சுக்கட்டி காணப்பட்டு வந்தது. இங்கு வாழ்ந்த முஸ்லிம்கள் முத்துக் குளிப்பதிலும் யானைபிடிப்பதிலும் தேர்ச்சி பெற்றிருந்தார்கள். இத்தகைய மக்களின் குடியேற்றத்தை வில்பத்து வனாந்திரத்திற்குள்  அமைந்துள்ளதாக குற்றச்சாட்டை முன்வைப்பவர்கள் இம்முஸ்லிம்களின் வரலாற்றை முதலில் படிக்க வேண்டும். இம்மக்களை விமர்சிப்பவர்கள் கடந்த இருபத்தி ஐந்து வருடங்களாக அகதி வாழ்கையில் வடக்கு முஸ்லிம்கள் பட்ட துன்பங்களை புரிந்துகொள்ள வேண்டும் என இந்நிகழ்ச்சியில் அமைச்சர் தெளிவாக எடுத்துரைத்தார்.

அதேநேரம் பல திசைகளில் இருந்தும் வந்த நேயர் நேரக் கேள்விகள் இனரீதியான கருத்துக்களை வெளிப்படுத்துபவையாகவே அமைந்திருந்தன. கடைசி நிமிசத்திலும் பாதிக்கப்பட்டவர்கள் என்ற அடிப்படையில் இதற்கான தீர்வுகளை முன்மொழியாது சகல ஊடகங்களும் இனவாதிகளும் பாரிய குற்றச்சாட்டுக்களை பழி சுமத்தும் நிலையையும் அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

ஷரீப் டீ அல்விஸ் என்ற மார்க்க அறிஞ்சரையும் அவர் உடுத்தி இருந்த அரேபிய கலாசார ஆடையையும் மக்களுக்கு காட்டி பலவிதமான பொய்ப் பிரச்சாரங்களும் மேற்கொள்ளப்பட்டது. சாந்தமான மனிதனை தீவிரவாதிகளுடன் இணைப்பதற்கான முயற்சிகளையே இவர்கள் மேற்கொண்டிருந்தார்கள். இதனூடாக அப்பாவி மக்களை தீவிரவாதத்திற்கு தள்ளுகின்ற நிலையையே சிங்கள இனவாதிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

அத்தனை பொய்களையும் உண்மை இல்லை என்று நிரூபித்த அமைச்சர் றிஷாத் பதியுதீன்  அவர்கள் வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் சட்ட ரீதியாகவே இடைபெற்றுள்ளது என்பதையும் வில்பத்து வனாந்திரத்துக்குள் எவ்வித முஸ்லிம் குடியேற்றமோ கொலனிகளோ இல்லை என்பதையும் நாட்டு மக்களுக்கு உரிய ஆதாரங்களுடன் நிரூபித்தார்.

அவ்வாறே வில்பத்து வன எல்லைக்குள் அமைந்துள்ள பூக்குளம் கிராமம் முஸ்லிம்கள் அல்லாத பகுதியாக இருப்பதோடு இதைப்பற்றி ஊடகங்கள் ஆர்வம் காட்டாமல் ஒதுங்கிச் செல்லுகின்றன என்பதையும் கேள்வி எழுப்பினார்.

Related Post