இலங்கைக்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வருகைதந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித்தலைவர் ஆகியோரை இன்றைய தினம் (9) சந்திக்கவுள்ளார்.
இவ்விடயம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹுசைனுடைய இலங்கை விஜயத்தின் இறுதி நாள் இன்றாகும். இந்நிலையில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் இன்று காலை 8 மணிக்கு எதிர்க்கட்சியான தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை கொழும்பிலுள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்திக்கவுள்ளார். இதன்போது எதிர்க்கட்சித்தலைவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தலைமையிலான உயர்மட்டக் குழுவினரை சந்திக்கவுள்ளார்.
அதனைத்தொடர்ந்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை காலை 9 மணிக்கு சந்திக்கவுள்ளார். இச்சந்திப்பு அலரிமாளிகையில் நடைபெறவுள்ளது. இதன்போது பிரதமர் ரணில்விக்கிரமசிங்க உட்பட முக்கிய அமைச்சர்கள் பங்கேற்கவுள்ளனர்.
பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் முக்கிய சந்திப்பொன்றை மனித உரிமை ஆணையாளர் நடத்தவுள்ளார். இதன்போது ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 30ஆவது கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், சமகால நிலைமைகள், உட்பட பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயப்படவுள்ளதாக தெரியவருகின்றது.
அதனைத்தொடர்ந்து பிற்பகல் 2.30இக்கு விசேட ஊடகவியலாளர் மாநாடொன்றில் கலந்து கொள்ளும் ஆணையாளர் நேரடி விஜயத்தின்போது அவதானிக்கப்பட்ட விடயங்கள் உட்பட பல்வேறு விடயங்கள் குறித்த தெளிவுபடுத்தல்களை மேற்கொள்வாரென எதிர்பர்க்கப்படுகின்றது.
இன்று மாலையில் இலங்கைக்கான தனது நான்கு நாள் உத்தியோக பூர்வ பயணத்தினை ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் நிறைவு செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.