அடுத்த ஆண்டின் ஆரம்பத்தில் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதித் தேர்தலில் நீதியான சமூகத்திற்கான இயக்கம் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக அந்த இயக்கத்தின் ஏற்பாட்டாளரான மாதுளுவாவே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பதை மையமாக கொண்ட ஜனாதிபதித் தேர்தலுக்கான தமது பிரசாரத்தினை ஓகஸ்ட் 26ஆம் திகதி முதல் ஆரம்பிக்கவுள்ளதாகவும், இந்தக் கொள்கையை ஆதரிக்கும் கட்சிகள் தங்களின் பின்னால் அணிதிரளும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கோட்டை சிறி நாகவிகாரையில் இடம்பெற்ற நீதியான சமூகத்திற்கான இயக்கத்தின் செயற்குழு கூட்டத்தின் பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், பொது வேட்பாளர் தொடர்பாக சமூகத்தின் சகல தரப்பினருடனும் பேச்சுக்களை மேற்கொள்ளப்போவதாகவும் அவர் கூறியுள்ளார்.