அரசியலமைப்பு 19 ஆவது தடவையாகவும் திருத்தம் செய்யப்பட்டுள்ள நிலையில் ஜனாதிபதியின் கணிசமான அதிகாரங்கள் குறைக்கப்பட்டுள்ளன. அதனால் ஜனாதிபதியின் கூற்றுக்களை ஆலோசனைகளாக மாத்திரமே எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதோடு பிரதமரின் கருத்துக்களையே நடைமுறைக்கு சாத்தியப்படும் விடயங்களாக கருத வேண்டும் என நவ சமசமாஜ கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவித்தார்.
யுத்தக்குற்ற விசாரணை நீதிமன்றம் அமைப்பது தொடர்பில் அரசாங்கம் அவசரம் காட்டாது என்ற ஜனாதிபதியின் கருத்து தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.
நேற்றைய தினம் இந்திய ஊடகமொன்றுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களை அமுல்படுத்தல் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது யுத்தக்குற்ற விசாரணை நீதிமன்றத்தை அமைப்பது தொடர்பில் அரசாங்கம் அவசரம் காட்டாது என குறிப்பிட்டுள்ளார்.
யுத்தக் குற்றம் இடம் பெற்றுள்ளமை தொடர்பில் முறையான மதிப்பீடுகள் இடம் பெற்ற பின்னரே குறித்த விவகாரம் தொடர்பிலும் ஏனைய அதிகார பகிர்வு தொடர்பிலும் தீர்வுகள் ஆராயப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு குறிப்பிடுகையில் மறுபுறம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமது விசேட உரையின் போது வடக்கு, கிழக்கு அப்பாவி தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு இவ்வருட இறுதிக்குள் தீர்வு காணப்படும் என்றும் கூறியுள்ளார். நாட்டில் 19 ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதன் போது ஜனாதிபதியின் இணக்கப்பாட்டுடன் அவரின் அதிகாரங்கள் கணிசமான அளவு குறைக்கப்பட்டன. இவ்வாறிருக்க தற்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வெளியிடப்படும் கருத்துக்கள் அனைத்தும் ஆலோசனைகளாகவே அமையும் என்பதில் மாற்றுக்கருத்து எமக்கு இல்லை.
அவை நடைமுறையில் சாத்தியமாகாது என்பதும் வெ ளிப்படையான காரணியாகும். அதனால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் உத்தியோகபூர்வ அறிவிப்புக்களே நடைமுறைக்கு சாத்தியமாக அமையும் என்றார்.