ஜனாதிபதி தலைமையிலான உயர்மட்ட தூதுக்குழு ஒன்று இம்மாத இறுதியில் ஈரானுக்கு விஜயம் செய்யவுள்ளதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
இந்த விஜயத்தின் மூலம் இலங்கை வர்த்தகர்களுக்கு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான புதிய வாய்ப்புகள் ஏற்படுமெனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
கைத்தொழில் வர்த்தக அமைச்சின் அதிகாரிகள், ஏற்றுமதி அபிவிருத்தி சபை. முதலீட்டு ஊக்குவிப்பு சபை, வர்த்தகத் திணைக்களம், தேயிலை சபை, சிலோன் வர்த்தக சம்மேளனம், தேசிய வர்த்தக சம்மேளனம் மற்றும் வெளிவிவகார அமைச்சின் பிரதிநிதிகள் ஆகியோரை அமைச்சின் அலுவலகத்தில் சந்தித்த போதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டார்.
இந்த சந்திப்பில் கலந்து கொண்ட இலங்கைக்கான ஈரானிய பிரதித் தூதுவர் எம் ஆர் அஹமதி ஜனாதிபதியுடனான விஜயத்தின் போது இலங்கையிலிருந்து ஈரானுக்குச் செல்லும் வர்த்தகர்களுக்கு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமை தாங்குவார் என குறிப்பிட்டார்.
அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இங்கு கருத்து தெரிவித்த போது,
ஈரானுக்கும் இலங்கைக்கும் இடையிலான இரு தரப்பு வர்த்தக உறவுகள், முதலீடு மற்றும் உல்லாசப் பயணத்துறை ஆகியவற்றை மேம்படுத்துவதே ஜனாதிபதியின் இந்த விஜயத்தின் நோக்கம் எனவும் குறிப்பிட்டார்.
ஈரானுக்கும் இலங்கைக்குமிடையிலான உறவுகள் அண்மையகாலங்களில் பலமடைந்துள்ள போதும் ஜனாதிபதியின் விஜயத்தின் பின்னர் இலங்கை வர்தகர்களுக்கு புதிய உத்வேகம் பிறக்குமெனவும் அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டார்.