‘சிறிய குடும்பத்திலிருந்து வந்தமையால் தான், என்னை ஓடஓட விரட்ட முயற்சிக்கின்றீர்களா, தூற்றுகின்றீர்களா என்று கேட்டு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாற்றும் போது, பிரதான மேடையில் இருந்த பலர் கண்ணீர் சிந்திவிட்டனர்’ என்று, மேல் மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய தெரிவித்தார்.
கொழும்பில் நேற்றுத் திங்கட்கிழமை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், ‘குருநாகலில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 65ஆவது மாநாட்டில், ஜனாதிபதி உரையாற்றுகின்றபோது, விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர உள்ளிட்ட பலரின் கண்களிலிருந்து கண்ணீர் வடிந்ததை நான் கண்டேன்’ என்றும் அவர் குறிப்பிட்டார்.
‘ஜனாதிபதியின் உரையினை கேட்டிருந்தால், ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் கருத்துகளுக்கு இனிமேலும் இடமிருக்காது’ என்றும் அவர் கூறினார்.
இந்த மாநாட்டுக்கு 5 இலட்சத்துக்கும் மேல் மக்கள் வந்திருந்தனர். அந்த ஆதரவாளர்களை ஏற்றிக்கொண்டு சுமார் 2,800க்கும் மேற்பட்ட இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்கள் வந்தனர். என்னுடைய ஆதரவாளர்களை ஏற்றிச்செல்வதற்கு இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்கள் கிடைக்கவில்லை. ஆகையால், தனியார் பஸ்வண்டிகளை வாடகைக்கு அமர்த்தியே நான், என்னுடைய ஆதரவாளர்களை அழைத்துச்சென்றேன்’ என்றும் அவர் கூறினார்.