ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எண்ணக்கருவிற்கமைய தேசிய உணவு உற்பத்திக்கான எழுச்சி “மீண்டும் நாம் எழுவோம்-களஞ்சியத்தை நிரப்புவோம்” எனும் தொனிப்பொருளிலான வேலைத்திட்டத்தில் நேற்று 10.10.2017ம் திகதி செவ்வாய்க்கிழமை தேசிய உணவு உற்பத்தி புரட்சி மீனவர் தினம் நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வருகின்றது.
இதனடிப்படையில், மட்டக்களப்பு மாவட்டத்தின் மீனவர் புரட்சி தினம் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் பிரதேச செயலக உதவித் திட்டப்பணிப்பாளர் எச்.எம்.எம்.றுவைத் தலைமையில் மீறாவோடை அமீர் அலி கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வின் போது தியாவட்டவான் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள மீன் கூடுகளில் கொடுவா மீன் குஞ்சுகள் விடப்பட்டுள்ளதுடன், ஜீவனோபாய வாழ்வாதார அபிவிருத்தித்திட்டத்தின் கீழ் கூடுகளில் கொடுவா மீன் வளர்ப்பிற்காக தெரிவு செய்யப்பட்ட 36 பேருக்கு இலங்கை தேசிய நீர் வாழ் அபிவிருத்தி அதிகார சபையின் நிதிப்பங்களிப்பில் இரண்டாம் கட்ட கொடுப்பனவாக ஒருவருக்கு ஒரு இலட்சத்தி இருபத்தையாயிரம் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில், கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி பிரதம அதிதியாகக்கலந்து கொண்டதுடன், மேலும் அதிதிகளாக கிழக்கு மாகாண கரையோர நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி உதவிப்பணிப்பாளர் எஸ்.ரவிக்குமார், கடல்தொழில் நீரியல் வள திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் ரூக்சான் குரூஸ் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இதன் போது பிரதியமைச்சர் மற்றும் அதிகாரிகள் படகு மூலம் ஓட்டமாவடி மற்றும் மீராவோடை ஆற்றின் கரையோர வளங்களைப் பார்வையிட்டனர்.
எஸ்.எம்.எம்.முர்ஷித்