நாட்டில் பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்காது நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாப்பதே ஆட்சியாளர்களின் கடமையாக இருக்க வேண்டும். ஆனால், இலங்கையில் மீண்டும் தீவிரவாதிகளின் ஆதிக்கத்துக்கு இடமளிக்கப்பட்டு வருகிறது.
அதனால், நாட்டின் தேசிய பாதுகாப்பினை உறுதி செய்து பிரச்சினைகளைத் தீர்க்காதுவிடின் ஜனாதிபதியும் பிரதமரும் உடனடியாக பதவி விலக வேண்டும் என பொதுபலசேனா அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
கிருலப்பனையிலுள்ள பொதுபலசேனா அமைப்பின் தலைமைக் காரியாலயத்தில் நேற்று நண்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது;
“பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் தற்போது அரசாங்கத்தினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டு வருகிறார்கள். இவ்வாறு அக்கைதிகள் விடுதலை செய்யப்படுவதை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
இலகுவான விசா நடைமுறைகளினால் வெளிநாடுகளிலிருந்து அடிப்படைவாத முஸ்லிம்கள் நாட்டுக்குள் உட்பிரவேசிக்கின்றனர். இவர்களால் இங்கு அடிப்படைவாதம், தீவிரவாதம் போதிக்கப்படுகிறது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களை சிறையிலிருந்தும் பிணையில் விடுதலை செய்வதால் எதிர்காலத்தில் நாடு பல பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க வேண்டியேற்படும்” என்றார்.