Breaking
Fri. Nov 15th, 2024
19ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு அமைய அமைக்கப்படவிருக்கும் அரசியலமைப்புப் பேரவையை அமைக்கும் விடயத்தில் எதிரணிகள் குந்தகமாகச் செயற்பட்டு பாராளுமன்றத்தின்  அங்கீகாரத்துக்குத் தடையாகச் செற்பட்டதையடுத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிரடி நடவடிக்கைளிலிறங்குவதற்குத் தயாராகி வருவதாக அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது. .
இதனடிப்படையில் எந்த வேளையிலும் பாராளுமன்றம் கலைக்கப்படக் கூடியச சாத்தியம் அதிகரித்து வருவதாகவும் அறியவருகின்றது. அரசியலமைப்புப் பேரவையை அங்கீகரித்ததன் பின்னர் எதிர்வரும்  9 ஆம் திகதி தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பான  20 ஆவது திருத்தத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டிருந்த நிலையில், நேற்று புதன்கிழமை எதிரணியினர் அரசியலமைப்புப் பேரவையின் உறுப்பினர்களை அங்கீகரிக்காது எதிர்ப்பை வெளிப்படுத்தியதால் மற்றொரு நெருக்கடி நிலை உருவெடுத்துள்ளது.
இதனிடையே  20 ஆவது திருத்தம் தொடர்பிலும் தொடர்ந்து இழுபறி நிலையே காணப்படுகின்றது. அடுத்தடுத்து நெருக்கடி நிலையை எதிர்கொண்டுவரும் அரசு  தீர்க்கமான முடிவொன்றை எடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. நேற்றைய (3) சம்பவத்தையடுத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி தேர்தலில் தமக்கு ஆதரவளித்த கட்சிகளின் தலைவர்களையும், முக்கிய கட்சிப் பிரமுகர்களையும் இன்று வியாழக்கிழமை அவசரமாகச் சந்திக்கிறார்.
இன்று மாலை 4 மணிக்கு  ஜனாதிபதி செயலகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளது. தற்போதைய நெருக்கடி நிலையை எவ்வாறு எதிர்கொள்வது என்பது பற்றி இன்றைய சந்திப்பில் ஆராயப்படவிருப்பதாகவும், அதற்குச் சாதகமானதொரு சமிக்ஞை எட்டப்பட முடியாது போனால் பாராளுமன்றத்தைக் கலைத்து தேர்தலுக்கு செல்வது குறித்தும் கவனம் செலுத்தப்படவிருப்பதாகவும் தெரியவருகின்றது.
அரசின்  பிரதான கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தேர்தலுக்குச் செல்லும் நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றது. ஆரம்பத்தல் 20 ஆவது திருத்தத்தை சமர்ப்பித்துவிட்டு பாராளுமன்றத்தைக் கலைக்கும் நிலைப்பாட்டைக் கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அந்த நிலைப்பாட்டில் தற்போது  தளர்வு ஏற்பட்டிருப்பதாக அறியவருகின்றது. இது இவ்விதமிருக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  நேற்று மாலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் அவசரச் சந்திப்பொன்றை மேற்கொண்டதாகவும் சுமார் ஒன்றரை மணிநேரம் இச்சந்திப்பு இடம்பெற்றது.
அவர்களது சந்திப்பு குறித்த தகவல்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை. இதேவேளை, பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பி. பெரேரா நேற்று மாலை  மொஸ்கோவுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்வற்கு முன்னர் ஊடகவியலாளர்களுடன் உரையாடிய போது உடனடியாக பாராளுமன்றம் கலைக்கப்படக் கூடிய நிலை உருவாகியுள்ளதாகவும் எந்த நேரத்திலும் இதற்கான அறிவித்தல் வெளியாகலாமெனவும் குறிப்பிட்டார்.

Related Post