Breaking
Sat. Jan 11th, 2025

18 ஆவது அரசியலமைப்பு திருத்தம் குறைபாடுகளுடன் நிறைவேற்றப்பட்டுள்ளதால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ மூன்றாவது முறையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் சந்தர்ப்பம் நழுவிப்போய்விட்டதென சட்டவல்லுனர்கள் தெரிவித்துள்ளனர் என்று சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா முதன் முறையாக வெளியிட்ட சட்ட ரீதியான தர்க்கம் சக்திமிக்கதெனவும் அதனை மீற முடியாதென்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அரசியலமைப்பின் 32/2 ஷரத்தின்படி மக்களால் தெரிவு செய்யப்பட்ட எந்தவொரு நபரும் அதன் பின்னர் அந்தப் பதவிக்கு மக்களால் தெரிவு செய்யத் தகுதியற்றவராகிறார் என்று சட்ட விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ 2010 ஜனவரி 27ஆம் திகதி இரண்டாவது முறையாக ஜனாதிபதி பதவிக்கு தெரிவு செய்யப்பட்டவுடன் சட்டவிதிகள் செயற்படுவதாக சரத் என். சில்வா சமீபத்தில் ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார்.

அப்போது இந்த சட்டவிதிகள் அமுலில் இருந்த போதே அவர் ஜனாதிபதி பதவிக்கு தெரிவு செய்யப்பட்டதால் அவர் மூன்றாவது முறையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தகுதியற்றவராகிறார்.

இருந்தும் 2010 செப்டெம்பர் 9 ஆம் திகதி முதல் நடைமுறையிலிருந்த 18ஆவது திருத்த சட்டத்தின் மூலம் மேற்கண்ட 31/2 ஷரத்து நீக்கப்பட்டது. இதன்படி கால வரையறையின்றி மீண்டும் ஜனாதிபதி பதவிக்குத் தெரிவு செய்ய எந்தவொரு நபருக்கும் வாய்ப்புள்ளது.

இருந்தும் சட்டம் அமுலுக்கு வருவதற்கு முன்னர் ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்து கொண்ட மஹிந்த ராஜபக் ஷவுக்கு அந்த சந்தர்ப்பம் கிடைக்காது. இவ்வாறு அச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(VK)

Related Post