இனவாதத்தை கக்கி ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றது போன்று, பொதுத்தேர்தலிலும் அதனை பாவித்து எளிதாக தமது எண்ணங்களை நிறைவேற்ற முடியாது என கலாநிதி அனீஸ் தெரிவித்தார்.
மன்னார், கொண்டச்சி கிராமத்தில் நேற்று (02) இடம்பெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் அவர் உரையாற்றினார். இந்த நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்களும் பங்கேற்றிருந்தனர்.
அவர் தனது உரையின் போது,
“ஜனாதிபதி தேர்தல் என்பது வேறு, பொதுத்தேர்தல் என்பது வேறு. ஜனாதிபதி தேர்தல் பரப்புரைகள், முழுக்கமுழுக்க இனவாதத்தையும் மதவாதத்தையும் அடிப்படையகக் கொண்டே முன்னெடுக்கப்பட்டதனால்தான் வெற்றிகண்டார்கள். ஆனால், பாராளுமன்ற தேர்தலானது இனவாத அடிப்படையில் செயற்பட முடியாத தேர்தல் ஆகும். ஏனெனில், ஒரே இனத்தைச் சார்ந்தவர்கள் பல்வேறு கட்சிகளில் களத்தில் நிற்பார்கள். கட்சிகளுக்கிடையே போட்டிகள் இருப்பது போன்று, ஒரே கட்சிக்குள்ளே வேட்பாளர்கள் மத்தியிலே விருப்புவாக்குப் போட்டிகளும் இருக்கின்றன. எனவே, இனவாதத்தை விதைத்து மக்களை உசுப்பேற்றி பாராளுமன்ற தேர்தலில் இலகுவாக வெல்ல முடியும் என்பது கடினமே!
அகில இலங்கை மக்கள் காங்கிரஸை பொறுத்தவரை, அதன் தலைமை கடந்தகாலங்களில் மேற்கொண்ட அனைத்து தீர்மானங்களும் சமூகத்தை முன்னிலைப்படுத்தியும் சமூக நன்மையை கருத்திற்கொண்டும் மேற்கொள்ளப்பட்டன. கட்சியின் தலைமையினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள், பல தேர்தல்களில் திருப்பங்களாக அமைந்துள்ளன. பெரும்பான்மை கட்சிகள் மக்கள் காங்கிரஸ் கட்சித் தலைமையின் முடிவுக்காக காத்திருந்த பல்வேறு சந்தர்ப்பங்களும் இருக்கின்றன. எனினும், கடந்த ஜனாதிபதி தேர்தலிலும் இடைக்காலத்திலும் இனவாத சக்திகளின் செயற்பாட்டினால் தற்காலிகமாக நமக்கு பின்னடைவு ஏற்பட்டிருந்தாலும் அந்த சக்திகள், தமது உசுப்பேற்றலை தொடர்ந்தும் கொண்டுபோக முடியாது. காலசூழ்நிலைகளுக்கேற்ப இது மாற்றமடையும்.
எதிர்வரும் பொதுத்தேர்தலில், எந்தவொரு பெரும்பான்மைக் கட்சியும் பெரும்பான்மை ஆசனங்களுடன் ஆட்சியமைக்க முடியாது. நினைத்த மாத்திரத்தில் வெற்றிபெற முடியாது. ஆட்சியமைக்க முயலும் கட்சிகளுக்கு சிறுபான்மை கட்சிகளினதும் சிறிய கட்சிகளினதும் உதவி நிச்சயமாக தேவைப்படும். அந்தத் தேவை ஏற்படும் பட்சத்தில் அவர்கள் முதலில் திரும்பிப் பார்ப்பது, இலங்கை அரசியலைப் பொறுத்தவரையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைமையாகத்தான் இருக்கும்.
‘அடுத்த பத்து வருடங்களுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், எதிர்க்கட்சியிலேயே இருக்க வேண்டி நேரிடும்’ என சிலர் கூறுகின்றனர். எந்தக் கட்சி பெரும்பான்மையை பெற்றாலும் ஆட்சி அமைப்பதற்கு, நமது உதவி தேவைப்பட்டே ஆகும். சிலவேளை சாதாரண பெரும்பான்மையை பெற்று ஆட்சியமைக்கும் நிலை ஏற்பட்டாலும் தற்போதைய அரசுக்கு மிகப்பெரிய தேவைப்பாடு இருக்கின்றது. தற்போது இருக்கின்ற யாப்பிலே திருத்தங்கள் செய்ய வேண்டிய சூழ்நிலை அவர்களுக்கு ஏற்பட்டுள்ளதனால், அறுதிப் பெரும்பான்மையான 150 ஆசனங்கள் வேண்டும். இந்தக்கட்டத்தில் கூட நமது உதவி அவர்களுக்கு தேவைப்படும்”. இவ்வாறு அவர் தெரிவித்தார்.