மஹிந்த ராஜபக்ஷவுடன் எனக்கு எவ்வித தொடர்பும் கிடையாது. ஜனவரி 8ம் திகதிக்கு முன்பிருந்த அதே எதிர்ப்பே இன்றும் எனக்குள் உள்ளது. கடந்த தேர்தலில் தோல்வியுற்றது போன்றே அவர் எதிர்காலத்திலும் தோல்வியுறுவார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
அவர் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் ஜனாதிபதியாகத் தொடர்ந்தும் அவரே இருக்க வேண்டும் என ஜனாதிபதிக்கான காலத்தை நீடிக்க வழி வகுத்தார். அது போன்றே கட்சியில் எத்தனையோ சிரேஷ்ட உறுப்பினர்கள் இருந்தும் பிரதமராக தாமே வரவேண்டும் என்று சிந்தித்து மற்றவர்களுக்குள்ள சந்தர்ப்பத்தை இல்லாதொழிக்க முயல்கின்றார். எனினும் ஜனவரி 8ம் திகதியைப் போன்றே எதிர்காலத்திலும் அவர் தோல்வியையே தழுவுவார் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
நேற்றுப் பிற்பகல் இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் இது தொடர்பில் மேலும் தெரிவித்த ஜனாதிபதி:-
பாராளுமன்றத் தேர்தலில் தாம் நடுநிலை வகிக்கப் போவதாகவும் தேர்தலில் எந்தக் கட்சி வெற்றிபெறும் என்பதல்ல, ஜனவரி 8ம் திகதி மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டுமென்பதே நோக்கமாக வேண்டும் எனவும் தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வேட்பு மனு வழங்கியது எமது இணக்கப்பாடோடல்ல என்பதைக் குறிப்பிட்ட ஜனாதிபதி கட்சியின் பெரும்பான்மை எடுத்த தீர்மானமே அது என்றும் தெரிவித்தார்.
தமக்கெதிரான விமர்சனங்களை பொருட்படுத்தப்போவதில்லை எனினும், நாட்டுக்காகவும் நாட்டின் ஜனநாயகத் தையும் மக்களையும் பாதுகாக்க அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வரும் தம்மை ஊடகங்கள் சில தாறுமாறாக தூசிப்பது பற்றியே தாம் கவலைப் படுவதாகவும் தெரிவித்தார்.
மஹிந்த ராஜபக்ஷவுடனான எதிர்ப்பு நிலை கடந்த ஜனவரி 8ம் திகதி எந்தளவில் இருந்ததோ அதே எதிர்ப்பு நிலைப்பாட்டிலேயே இன்றும் உள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி: இம்முறை தேர்தலில் தாம் நடுநிலையுடன் செயற்படப்போவதாகவும் தெரிவித்தார்.
நேற்றைய தினம் ஜனாதிபதி செயலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விஷேட செய்தியாளர் மாநாட்டின்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தாம் பெற்றுக்கொடுத்த சுதந்திரத்தை தமக்கு எதிராகவே மிக மோசமாகப் பயன்படுத்தும் ஊடகங்கள் தொடர்பில் கவலை தெரிவித்த ஜனாதிபதி அந்த நிலையை தொடரவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி:
நான் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்ன ணியின் தலைமைத்துவத்தை ஏற்றுள்ளமை தொடர்பில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப் படுகின்றன. நான் முன்வந்து ஏற்றுக் கொண்ட பதவியல்ல அது. எனினும் பெரும்பான்மை விருப்புடன் அதை ஏற்றுக்கொண்டேன்.
நான் அவ்வாறு செயற்பட்டிருக்கா விட்டால், அப்பதவியை மஹிந்த ராஜபக்ஷ ஏற்று இரண்டு கட்சியினதும் தலைமைத்துவத்தை அவரே ஏற்றிருப்பார். எதிர்வரும் தேர்தலுக்காக அனைத்துத் தொகுதிகளிலும் வேட்பாளர் பட்டியல் அவரது தலைமையிலேயே தயாரிக்கப்பட் டிருக்கும்.
அவரது ஆதரவாளர்களுக்கு முக்கியத்து வம் கொடுப்பதுமல்லாமல் ஜனவரி 8ம் திகதி அரசாங்கம் அமைப்பதற்கு என்னோடு ஒத்துழைப்பு வழங்கியவர்கள் நிராகரிக்கப்பட்டு அவர்கள் வேட்பு மனுப்பட்டியலில் இடம்பெறுவது தவிர்க்கப்பட்டிருக்கும். இதை சகலரும் உணரவேண்டும்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைப் பாராளுமன்றத்தில் கொண்டு வந்து அவரைத் தோற்கடித்து அதற்குப் பதிலாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் ஒருவர் தம் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவைக் கொண்டு வருவதற்கே சூழ்ச்சிகள் நடைபெற்றன. நானே அதனைத் தடுத்தேன். பாராளுமன்றத்தைக் கலைத்தேன். இல்லாவிட்டால் நிலைமை மாறியிருக்கும். இப்போது அவர் கட்சியில் எத்தனையோ சிரேஷ்ட உறுப்பினர்கள் உள்ளபோது அவர்களுக்கு பிரதமராகும் வாய்ப்பை இல்லாதொழித்து தாமே பிரதமராக முற்படுகிறார்.
நான் ஒன்றைத் தெளிவாகக் கூறவேண்டியுள்ளது. எதிர்வரும் தேர்தலில் நான் நடுநிலையாகவே செயற்படுவேன்.
கடந்த ஜனவரி 8ம் திகதி நாட்டில் ஏற்பட்ட மாற்றம் மற்றும் ஜனநாயகப் புரட்சியின் காரணமாகவே 42 நாட்களில் நாட்டின் எதிர்காலம் தொடர்பான ஜனநாயகம், சுதந்திரம், அடிப்படை உரிமை, மனித உரிமை, ஊடக சுதந்திரம் போன்றவற்றைப் பாதுகாத்து புதிய அரசாங்கத்தை அமைக்க முடிந்தது.
எனது 49 வருட அரசியல் அனுபவத் துடன் பாராளுமன்ற உறுப்பினராக, பிரதி அமைச்சராக, அமைச்சராக மக்களின் வரவேற்பைப் பெற்றுள்ளேன். நான் மோசடிக்காரனல்ல. நாட்டின் ஜனநாயகத் தையும் சுதந்திரத்தையும் பாதுகாப்பவன். அதே போன்று எனக்குக் கிடைத்த அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யவி ல்லை என்பதால் நான் ஜனாதிபதி பதவிக்குப் பொருத்தமானவன் என மக்கள் மத்தியில் நம்பிக்கை எழுந்தது.
நான் ஜனாதிபதியாகப் பதவியேற்று சில நிமிடங்களில் ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமராக்கினேன். நான் ஜனவரி 8ம் திகதிக்கு முன்பு இரண்டு விடயங்களுக்காக இணக்கம் தெரிவித்தேன். முதலாவது எம்மோடிணைந்திருந்த 49 கட்சிகள் மற்றும் அமைப்புகளுடன் ஏற்படுத்திக் கொண்ட இணக்கப்பாடு, அடுத்தது நான் ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின் ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமராக்குவது என்ற தீர்மானம் அதை நான் நிறை வேற்றினேன்.
பிரதமராக ரணில் பதவியேற்ற போது பாராளுமன்றத்திலுள்ள 225 பேரில் 47 பேரே ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களாக இருந்தனர். 47 பேருள்ள கட்சியின் தலைவரையே நான் பிரதமராக்கினேன். தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் நான் பதவி வழங்கியவர்களும் எனக்கு நெருக்கமாக செயற்பட்டவர்களும் என்னை குற்றச்சாட்டுக்களுக்கு உட்படுத்தி வருகின்றனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்றமை தவறு என கூறுகின்றனர்.
நான் ஜனவரி 9ம் திகதி பதவியேற்று 10ம் திகதி பாராளுமன்றத்தைக் கலைக்கவே தீர்மானித்திருந்தேன். எனினும் எம்மோடு இணைந்திருந்த கட்சிகள் பாராளுமன்றத்தைக் கலைக்க வேண்டாம் எனவும் 100 நாள் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கோரினார்கள்.
அது ஒன்றும் இலேசான காரியமல்ல.
அரசியலமைப்பை மாற்றுதல், நிறைவேற்று ஜனாதிபதி முறையை நீக்குவது அல்லது அதிகாரங்களைப் பாராளுமன்றத்துக்குப் பகிர்ந்தளிப்பது சுயாதீன ஆணைக்குழுக்களை அமைப்பது போன்ற வாக்குறுதிகளையும் மக்களுக்கு வழங்கியது இதனூடாகவே.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையை நான் பொறுப்பேற்றது தவறு என கூறுபவர்களுக்கு நான் 43 கட்சிகளைக் உள்ளடக்கிய தலைவரை பிரதமராக்கியது பற்றியும் குறிப்பிட விரும்புகின்றேன்.
ஜனவரி 16ம் திகதி நான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையைப் பொறுப்பேற்றது நானே எடுத்த முடிவல்ல. நான் அதைக்கேட்கவுமில்லை. எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதனால் 142 உறுப்பினர்களைக் கொண்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு நான் தலைவரானேன். அதனால் நான் 100 நாள் வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்யவும் 19வது திருத்தத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றவும் முடிந்தது.
அது மட்டுமல்ல இப்போது ஐ.தே.க.வினர் பெரிதாக மக்கள் மத்தியில் கூறும் அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் குறைத்தமை அரச ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தியமை போன்றவை அனைத்துமே நான் அப்பதவியைப் பொறுப்பேற்றதால்தான் நிறைவேற்ற முடிந்தது.
நான் கட்சியின் தலைவராக இல்லாமல் மஹிந்த ராஷபக்ஷ அப்பதவியில் இருந்திருந்தால் 19வது திருத்தத்தையோ, வரவு செலவுத் திட்டத்தையோ நிறைவேற்றியிருக்க முடியாது. மக்களுக்கு நிவாரணங்களை வழங்கியிருக்கவும் முடியாது என்பதை சகலரும் சிந்திக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.