இலங்கை தொடர்பான அமெரிக்க கொள்கைகளில் மாற்றமில்லை என அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.
அமெரிக்கா இலங்கை தொடர்பான கடுமையான நிலைப்பாடுகளைத் தளர்த்திக் கொண்டுள்ளதாக அண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டார் என தகவல்கள் வெளியாகியிருந்தன.
அமெரிக்காவின் இலங்கை தொடர்பான நிலைப்பாட்டில் தளர்ச்சி தெரிவதைதான் அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஜோன் கெரியுடனான சந்திப்பின்போது உணர்ந்ததாக அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்ததாக வெளியான செய்திகளையே அமெரிக்கா நிராகரித்துள்ளது.
இது தொடர்பில் அமெரிக்காவின் வெளிவிவகார பேச்சாளர் ஜென் சகி தெரிவித்துள்ளதாவது :-
இலங்கை ஊடகங்களில் வெளியான தகவல்களில் ஒரு விடயம் மாத்திரம் சரியானது. வெளிவிவகார அமைச்சர் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் கூட்டத்தொடரின்போது இலங்கை ஜனாதிபதியை சந்தித்தார்.
இலங்கை தொடர்பான அமெரிக்க கொள்கையில் மாற்றமெதுவும் இல்லை என்ற நோக்கத்தை தெரியப்படுத்தும் நோக்குடனேயே இந்த சந்திப்பு இடமபெற்றது. நிச்சயமாக இலங்கை தொடர்பான கொள்கையில் தளர்ச்சியேற்படவுமில்லை.
இலங்கையுடனான எமது உறவு முழுமையாக வளர்ச்சி காணவேண்டும் என நாங்கள் விரும்புகிறோம், இலங்கை தனது பல தரப்பட்ட இன மத குழுக்களிற்க்கு நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்திக்கொடுத்தாலே சாத்தியமாகும்.
இதன் காரணமாகவே இலங்கை தொடாந்தும் யுத்தத்தில் ஈடுபட்டிராத நாடு என்பதை காண்பிக்கும் விதத்திலான அர்த்தபூர்வமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.