எனது அரசியல் வாழ்க்கையில் அதிகாரங்களை கைவிட்ட எந்தத் தலைவரையும் நான் கண்டதில்லை. தமது அதிகாரங்களை அதிகரித்துக்கொள்ளவே தலைவர்கள் முயற்சித்தனர். ஆனால் 19 ஆவது திருத்தத்தின் ஊடாக ஜனாதிபதி தனது அதிகாரங்களை குறைத்துக்கொண்டுள்ளார் என்று நிதி இராஜாங்க அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.
அமெரிக்க இராஜாங்க செயலர் இலங்கைக்கு வந்ததன் மூலமும் அவர் கூறிய விடயங்களின் மூலமும் உலகின் மிகப்பெரிய வல்லரசு நாட்டின் உதவி எமக்கு கிடைத்துள்ளமை உறுதியாகியுள்ளது. இது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
களுத்துறை பகுதியில் சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவின் தீர்மானத்துக்கு அமையவே நான் அமைச்சுப் பதவியை பெற்றுக்கொண்டேன். அன்று எனக்கு அமைச்சுப் பதவி கிடைக்கும் என்று ஜனாதிபதி செயலகத்துக்கு செல்லும் வரை தெரிந்திருக்கவில்லை. என்னி்டம் காணப்படுகின்ற திறமை மற்றும் அர்ப்பணிப்பை கவனத்திற்கொண்டு ஜனாதிபதி உள்ளிட்ட சிரேஷ்டத்துவமிக்கவர்கள் எனக்கு அமைச்சுப் பதவியை வழங்க தீர்மானித்திருப்பர் என்று நம்புகின்றேன்.
டீல் போட்டு இந்த அமைச்சப் பதவியை நான் பெறவில்லை. தற்போதைய அரசாங்கம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கம் என்பதால் நாட்டின் அபிவிருத்திக்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பங்களிப்பை பெற தீர்மானிக்கப்பட்டிருக்கலாம். அதனால்தான் எங்களுக்கு அமைச்சுப் பதவி கிடைத்துள்ளது.
அமைச்சுப் பதவி கிடைக்காதவர்களுக்கு மனவருத்தம் இருக்கலாம். நான் ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்துகொள்ளவில்லை. நான் சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் இருக்கின்றேன். நாங்கள் அமைச்சுப் பதவிகளை கைவிடவேண்டும் என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சி நாளை தீர்மானம் எடுத்தால் முதலாவதாக அமைச்சுப் பதவியை கைவிடுபவனாக நான் இருப்பேன். நான் கட்சியின் கொள்கையுடன் இருக்கின்றேன்.
நான் அமைச்சுப் பதவியை பெற்றுக்கொண்ட பின்னர் எமக்கு பலம் கிடைத்துள்ளது. எமது கட்சி ஆதரவாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட சித்திரவதைகள் நிறுத்தப்பட்டன. கடந்தவாரம் அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. எனது அரசியல் வாழ்க்கையில் அதிகாரங்களை கைவிட்ட எந்தத் தலைவரையும் கண்டதில்லை.
தமது அதிகாரங்களை அதிகரித்துக்கொள்ளவே தலைவர்கள் முயற்சித்தனர். மிக முக்கியமாக அமைச்சர்களின் எண்ணிக்கையை குறைக்கும் யோசனை நாட்டின் பொருளாதாரத்தில் தாக்கம் செலுத்தும். அமைச்சர்களின் எண்ணிக்கை 30 ஆக இருக்கவேண்டும் என்று அரசியலமைப்பில் திருத்தம் செய்ய்ப்பட்டுள்ளது. பிரதியமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் எண்ணிக்கை 45 ஆக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
எனவே ஜனாதிபதி தான் கூறுவதை செய்யும் தலைவராக இருக்கின்றமை நாம் மகிழ்ச்சியடையும் விடயமாகும். இலங்கையை பல வருடங்களாக திரும்பியும் பார்க்காத நாடுகள் இலங்கைக்கு வருகை தந்து உதவிகளை வழங்க முன்வந்துள்ளன. அமெரிக்காவின் இராஜாங்க செயலர் ஒருவர் இறுதியாக 1972 ஆண்டே இலங்கை வந்திருந்தார்.
ஆனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வெளிநாட்டுக் கொள்கையை ஏற்றுக்கொண்டுள்ள அமெரிக்காவின் இராஜாங்க செயலர் இலங்கைக்கு வருகை தந்தார். அவர் இலங்கைக்கு வந்ததன் மூலமும் அவர் கூறிய விடயங்களின் மூலமும் உலகின் மிகப்பெரிய வல்லரசு நாட்டின் உதவி எமக்கு கிடைத்துள்ளமை மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.