ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார்.
விவசாய நடவடிக்கைகளுக்கு சலுகை கட்டண அடிப்படையிலான புதிய முறைமை ஒன்றை அறிமுகம் செய்வதற்காக “விவசாய நிலத்திற்கு மின்சாரம்” என்ற புதிய திட்டத்தை ஆரம்பித்து வைப்பதற்காக ஜனாதிபதி யாழ்ப்பாணம் விஜயம் செய்யவுள்ளார்.
யாழ்ப்பாணம் நீர்வேலி, பொன்செல்வமஹால் அரங்கில் இந்த நிகழ்வு இன்று நடைபெறவுள்ளது.
இலங்கை விவசாயிகளுக்காக இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்த திட்டத்தின் ஊடாக இலங்கை விவசாய துறையில் பாரிய முன்னேற்றத்தை பதிவு செய்ய முடியும் என மின்வலு எரிசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
விவசாயிகளுக்கு சலுகைக் கட்டண அடிப்படையில் விவசாய நடவடிக்கைகளுக்கு மின்சாரம் வழங்கப்படவுள்ளது.
இன்றைய தினம் நடைபெறவுள்ள நிகழ்வில் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, பிரதி அமைச்சர் அஜித் பெரேரா, வட மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே ஆகியோர் உள்ளிட்ட பலர் பங்கேற்கவுள்ளனர்.
அண்மைய நாட்களில் பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ள வட மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரனுக்கும் இந்த நிகழ்வில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.