Breaking
Mon. Jan 13th, 2025

ஜனாஸா எரிப்பு விடயத்தில், அரசாங்கம் தொடர்ந்தும் விடாப்பிடியாக  இருந்து வருவதாகவும் இது தொடர்பிலான கோரிக்கைகள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டு, வைத்தியர்களின் மேல் பழியைப் போட்டுவிட்டு வாளாவிருப்பதாகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்காமல், மதக்கடமைகளை இல்லாமலாக்கவே இவ்வாறு செயற்படுகின்றார்கள் எனவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

வன்னி மாவட்ட வாக்காளர்களுக்கு நன்றி கூறும் நிகழ்வு, முல்லைத்தீவில் நேற்று (24)  நடைபெற்றது.  இங்கு உரையாற்றிய  அவர் மேலும் கூறியதாவது,

இந்த விவகாரம் குறித்து, வைத்தியர்கள் உள்ளடங்கிய நிபுணர் குழுவொன்றை நியமித்து, ஆராய வேண்டுமென்று விடுக்கப்பட்ட கோரிக்கைகள் கூட மறுதலிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றில் 2/3 அல்லது 5/6 பெரும்பான்மை ஆசனங்களோ அல்லது 225 பிரதிநிதிகளையயும் கூட ஆளுங்கட்சி பெற்றாலும், இறைவன் ஒருவன் இருக்கின்றான் என்ற நம்பிக்கைகொண்டவர்கள் நாங்கள். அனைத்தையும் ஆள்பவன் அவனே! என்று முழுமையான நம்பிக்கையுடன் நாம் வாழ்வதாலேயே, இன்னும் பொறுமை காக்கின்றோம். எனவே, ‘இந்த அநியாயச் செயலை இனிமேலாவது நிறுத்துங்கள்’ எனவும் கோருகின்றோம்.

எதிர்க்கட்சி அரசியலை மேற்கொண்டே, வன்னி மாவட்டத்தில் ஆகக் கூடிய விருப்பு வாக்குகளை நான் பெற்றுக்கொண்டேன். மக்கள் காங்கிரஸ் கட்சி சார்ந்த வாக்காளர்களுக்கு கிடைத்த கெளரவமாகவே இதனைக் கருதுகின்றோம். கடந்த ஐந்து தேர்தலில் போட்டியிட்டுள்ளோம். ஒவ்வொரு தேர்தல்களிலும் விருப்பு வாக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்ததுடன், இம்முறை மாவட்டத்தில், விருப்பு வாக்கில் முதலிடம் பெறவும் முடிந்தது. இறைவனின் உதவியினாலும் உங்களின் ஆதரவினாலும் உழைப்பினாலுமே இந்த வெற்றி கிடைத்தது.

தாங்க முடியாத தொல்லைகள், மனக் கஷ்டங்கள், தடைகளுக்கு மத்தியிலேயே இந்த அடைவைப் பெற்றுள்ளோம். பல மாவட்டங்களில் போட்டியிட்ட நமது கட்சி வேட்பாளர்களுக்காக, பிரச்சாரம் செய்ய முடியாத நிலையும் எமக்கு ஏற்பட்டது. எமது நேரத்தைச் சூறையாடி, நமக்குக் கிடைக்கும் வாக்குகளையும் சூறையாட மேற்கொண்ட முயற்சிகளுக்கு மத்தியிலேயே, மக்கள் எம்மை வெற்றிபெறச் செய்துள்ளார்கள் என்றார்.

 

 

Related Post