ஜப்பானில் அமெரிக்க கடற்படை வீரர் ஓட்டிச் சென்ற கார் மோதி இருவர் காயமடைந்ததால், ஓகினாவோ தீவிலுள்ள அமெரிக்க கடற்படை வீரர்கள் 18,600 பேர் இனி மது அருந்த கூடாது என அமெரிக்க கடற்படை தலைமையகம் தடை விதித்துள்ளது.
அமெரிக்க கடற்படை வீரர்களில் ஒருவரான ஐமி மேஜியா(21) என்பவர் நேற்று முன்தினம் வீதி விதிகளை மீறியவகையில் எதிர்திசையில் தனது காரை வேகமாக ஓட்டிச்சென்று அவ் வழியாக சென்ற இன்னொரு காரின்மீது நேருக்குநேராக மோதியுள்ளார்.
இதில் எதிரே சென்ற காரில் இருந்த இருவர் காயமடைந்தனர். இந்த விபத்தின்போது ஐமி மேஜியா குடிபோதையில் இருந்ததாக குற்றம்சாட்டிய ஓகினாவா பொலிஸார் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இந்நிலையில், ஓகினாவா தீவில் உள்ள கடேனா கடற்படை தளத்தில் முகாமிட்டுள்ள 18,600 கடற்படை வீரர்கள் இனி மது அருந்த கூடாது எனவும், அத்தியாவசியப் பணிகளுக்காக அன்றி கடற்படை தளம் முகாமை விட்டு வெளியே செல்லவும் ஜப்பானிலுள்ள அமெரிக்க கடற்படை தலைமையகம் தடை விதித் துள்ளது.