மதீனாவில் நபிகள் நாயகம் (ஸல்) நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள மஸ்ஜிதுந் நபவி பள்ளிவாசலுக்கு அருகாமையில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை வன்மையாகக் கண்டித்துள்ளது.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ. முபாரக் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
‘ரமழான் மாதத்தின் இறுதி நாளில் முஸ்லிம்களின் புனித இடமான முஸ்ஜிதுல் நபவி பள்ளிவாசலுக்கு முன்பு அப்பாவி மக்களை இலக்குவைத்து தீவிரவாதிகள் மேற்கொண்ட தற்கொலை குண்டு தாக்குதலில் 5 பேர் பலியாகியிருக்கிறார்கள்.
இஸ்லாமிய தீவிரவாதத்தை எதிர்க்கிறது. எனவே இதனை யார் செய்தாலும் இஸ்லாத்தை மீறிய செயலாகும். தீவிரவாத செயல்களினால் மக்களைக் கொல்வதினால் தமது இலக்கினை அடைந்துகொள்ள முடியாது என்பதை அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
தீவிரவாதிகளுக்கு எதிராக உலகின் அனைத்து முஸ்லிம் நாடுகளும் ஒன்றிணைய வேண்டும். இவ்வாறான தீவிரவாத செயல்களே முஸ்லிம்களைப் பற்றி ஏனைய சமூகங்கள் தவறான கருத்துக்களைக் கொள்வதற்கு காரணமாக அமைகிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.