ஜித்தா: உலக அதிசயங்களுள் பிரதானமாகவும், உலக முஸ்லிம்களின் அற்புதப் பாணமாகவும் கருதப்படும் “ ஜம் ஜம் நீரைக் கொள்வனவு செய்ய வேண்டுமானால், பிரயாணிகள் தங்களது கடவுச்சீட்டை சமர்ப்பிக்க வேண்டியது அவசியம்” என்பதாக மன்னர் அப்துல்லாஹ் ஜம் ஜம் திட்டக்குழு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
வருடந்தோரும் மில்லியன் கணக்கான மக்கள் சவுதி அரேபியாவுக்குள் உம்ரா, ஹஜ் மற்றும் விருந்தனர் போன்ற தேவைகளுக்காக வந்து செல்கின்றனர். குறிப்பாக யாத்திரிகர்களாக வருபவர்கள் தங்களது நாடுகளுக்கு ஜம் ஜம் நீரையும் தவறாமல் எடுத்துச் செல்கின்றனர்.
ஜித்தா பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்து, ஜம் ஜம் நீர் விற்பனை நிலையங்களைப் பரிசோதித்போது, சட்டவிரோதமான ஜம் ஜம் நீர் கலப்பு இடம்பெற்றிருப்பதை மக்கா மற்றும் ஜித்தா பொலிஸார் கைப்பற்றி, அதனைப் பரிசோதித்ததில் சாதாரணமான நீருடன் ஜம் ஜம் நீரும் கலக்கப்பட்டிருந்தமை ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளது.
வெளிநாட்டினர்களையும், யாத்திரிகர்களையும் குறிவைத்து, கலப்பு ஜம் ஜம் கொள்கலன்களை சட்டவிரோதமாக விற்பனையிலீடுபட்டவர்களை தேடிப்பிடிக்கும் முயற்சியில் மக்கா-ஜித்தா பொலிஸார் தீவிர முயற்சியில் ஈடுபடுகின்றனர்.
இவ்வாறான சட்டவிரோத, மோசடிகளில் இருந்து ஜம் ஜம் நீரையும், யாத்திரிகளின் ஏமாற்றங்களையும் தடுப்பதற்காக, புதிய சட்டத்தை மன்னர் அப்துல்லாஹ் ஜம் ஜம் திட்டக்குழு, சவுதி விமான சேவைகள் அமைச்சுடன் இணைந்து அமல்படுத்துகிறது.
இதன்படி, யாத்திரிகர்கள் அல்லது ஏனைய பிரயாணிகள் ஜம் ஜம் நீரை விமான நிலையத்தில் அல்லது, அமைச்சின் அனுமதியளிக்கப்பட்ட இடங்களில் மாத்திரமே பெற்றுக்கொள்ள முடியும்.
ஒரு பயணி அதாவது, ஒரு பாஸ்போர்ட்க்கு 5 லிட்டர் கொண்ட ஒரு கலன்ஃபோத்தல் ஜம் ஜம் நீர் மாத்திரமே வழங்கப்படும். இதனைப் பெறுவதற்கு 9 ரியால்கள் அறவிடப்படும்.
சவுதியில் வசிக்கும் வெளிநாட்டினர் ஜம் ஜம் நீரைப் பெறுவதற்கு தங்களது பாஸ்போர்டை எடுத்துச் செல்வது அவசியமாகின்றது. இல்லாதபட்சத்தில் இரு ஹரங்களிலும் சென்று அருந்திவிட்டு வருவதைத் தவிர வேறு வழியில்லை.