Breaking
Mon. Dec 23rd, 2024

சென்னை

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
உலகப் புகழ்பெற்ற இந்திய இஸ்லாமிய பரப்புரையாளர் மருத்துவர். ஜாகிர் நாயக்கை களங்கப்படுத்தியும், தீவிரவாதத்தோடு தொடர்புபடுத்தியும் மத்திய அரசு வெளியிட்டு வரும் அவதூறுகளுக்கு எதிராக எமது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்கிறோம்.

மும்பையைச் சேர்ந்த மருத்துவரும், இஸ்லாமிய அறிஞருமான ஜாகிர் நாயக், இஸ்லாமிய மார்க்கத்தை மட்டுமின்றி, பல்வேறு சமயங்களின் வேத நூற்களையும், கோட்பாடுகளையும் ஆழமாகக் கற்றவர். சமயக் கோட்பாடுகளுக்கு இடையே இருக்கும் ஒருமைப்பாட்டை, நுண்மான் நுழைபுலத்தோடு பேசக்கூடியவர். இவரது Similarities between Islam and Hinduism (இஸ்லாமிற்கும், இந்து சமயத்திற்கும் இடையிலான ஒற்றுமைகள்) என்ற ஆய்வு நூலே இதற்குச் சான்று. இந்நூல் ‘தமிழில் இஸ்லாமும், இந்து சமயமும்’ என்ற தலைப்பில் முனைவர் ஜெ. ஹாஜாகனியால் மொழிபெயர்க்கப்பட்டு தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளாரின் வாழ்த்துரையோடு வெளிவந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இலட்சக்கணக்கான மக்களைத் தமது அமைதிவழிப் பேச்சின் மூலம் கவர்ந்தவர் ஜாகிர் நாயக். உலகின் பல்வேறு நாடுகளின் அரசு விருந்தினராகவும் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற சிறப்பிற்குரிய இந்தியராவார். தனது பேச்சாலும், எழுத்தாலும், பயங்கரவாதத்தையும், பயங்கரவாதப் பழியை முஸ்லிம்கள் மீது திட்டமிட்டு சுமத்தும் பாசிச சக்திகளையும் எதிர்த்து வரும் மருத்துவர் ஜாகிர் நாயக் மீது, மத்திய அரசு காழ்ப்புணர்வு கொண்டு அவரை ஒடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. இது வன்மையான கண்டனத்திற்குரியது.

சமீபத்தில் 20க்கும் மேற்பட்ட அப்பாவி மக்களின் உயிர்களை வங்காளதேசத்தில் பறித்த பயங்கரவாதத் தாக்குதல் உட்பட அப்பாவி மக்களை இலக்காகக் கொள்ளும் எல்லாவகையான பயங்கரவாதங்களையும் தான் எப்போதுமே மிக வலிமையாக கண்டித்துள்ளதாக ஆதாரப்பூர்வமாக மரு. ஜாகிர் நாயக் உறுதிப்பட தெரிவித்துள்ளார். இருப்பினும் மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, மரு. ஜாகிர் நாயக் மீது நடவடிக்கை எடுக்கப் போவதாகக் கூறியுள்ளார். பாஜக தலைவர் முரளிதர ராவ், அஸதுதீன் உவைசி போல் இவரும் சர்ச்சைக்குரிய பேச்சாளர் என்று கூறியுள்ளார். சமூக அமைதியைக் குலைப்பதையே வழக்கமாகக் கொண்டவர்களின் பாசறையிலிருந்து இத்தகையக் குரல்கள் ஒலிப்பது வேடிக்கையானது.

அன்று குஜராத் முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடி உள்ளிட்ட சங்கப் பரிவார் தலைவர்களின் வெறுப்பு உமிழும் பேச்சுக்கள் மற்றும் எழுத்துக்களால் தூண்டப்பட்டு ஆயிரக்கணக்கான இந்தியர்கள் குஜராத், முசாப்பர்நகர் முதலிய இடங்களில் உயிரிழந்தனர். இதற்காக இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா? நரேந்திர மோடியின் வெறுப்பு உமிழும் பேச்சுகளுக்காக அமெரிக்காவும் பிரிட்டனும் அவர் தங்களது நாட்டிற்குள் வரக்கூடாது என்று தடை விதித்ததை மறக்க முடியுமா?

வங்கதேசத்தில் பயங்கரவாதச் செயலில் ஈடுபட்ட ஒருவன் மரு. ஜாகிர் நாயக்கால் தூண்டப்பட்டான் என்று சொல்லி அவர் மீது பயங்கரவாத முத்திரையைக் குத்துவது மத்தியில் ஆளும் பா.ஜ.க.வின் அப்பட்டமான சிறுபான்மையின வெறுப்பு போக்கை வெளிப்படுத்துகின்றது. அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 25 அளித்துள்ள உரிமையின் அடிப்படையில் மிக உயர்ந்த தொழில்நுட்பத்துடன் மருத்துவர் ஜாகிர் நாயக் செய்து வரும் இஸ்லாமியப் பரப்புரையை முடக்குவதற்கு நரேந்திர மோடி அரசு திட்டம் தீட்டி வருகின்றது.

டாக்டர் ஜாகிர் நாயக்கின் சில கருத்துகளிலும், அணுகுமுறைகளிலும் நமக்கு மாற்றுக் கருத்துண்டு என்றபோதும், அவரை பயங்கரவாதத்துடன் தொடர்புப்படுத்தி பாசிச சக்திகள் முடக்க நினைப்பதைக் கடுகளவும் ஏற்க முடியாது. ஜனநாயக நாட்டில் கருத்துரிமையை நசுக்கும் பாசிச நடவடிக்கைகள், மருத்துவர் ஜாகிர் நாயக் மீது பாயும் என்றால், மாபெரும் அறப்போராட்டங்களை நடத்தி அராஜக சக்திகளை அம்பலப்படுத்துவோம் என்று எச்சரிக்கிறேன்

By

Related Post