இந்தியாவைச் சேர்ந்த முஸ்லிம் மத போதகர் ஜாகிர் நாயக் வெறுப்பூட்டும் வகையில் பேசி வருவது ஆட்சேபணைக்குரியது என்றும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய செய்தி, ஒலிபரப்புத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.
இதுகுறித்து தில்லியில் செய்தியாளர்களிடம் மத்திய செய்தி, ஒலிபரப்புத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறியதாவது:மத போதகர் ஜாகிர் நாயக்கின் சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து உள்துறை அமைச்சகம் ஆய்வு செய்து வருகிறது. ஆய்வு முடிந்த பிறகு, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் வெங்கய்ய நாயுடு.
ஜாகிர் நாயக் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு ஏற்கெனவே தெரிவித்துள்ளார்.இதனிடையே, ஜாகிர் நாயக்கின் பேச்சு குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
மும்பையில் உள்ள ஜாகிர் நாயக்கின் அலுவலகத்துக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த மாநில காவல் துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில், “மும்பையின் டாங்ரி பகுதியில் ஜாகிர் நாயக் நடத்திவரும் இஸ்லாமிய ஆய்வு நிறுவனத்துக்கு முன்பு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். அவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவரது அலுவலகத்துக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன’ என்றார்.
ஐ.எஸ். அமைப்பு இஸ்லாமுக்கு எதிரானது: இந்நிலையில், ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு இஸ்லாம் மதத்துக்கு எதிரானது என்று உத்தரப் பிரதேச மாநிலம், லக்னௌவைச் சேர்ந்தவரான முஸ்லிம் மதகுரு மௌலானா ரஷீத் ஃபாரங்கி மஹாலி குற்றம்சாட்டினார்.
கடந்த வாரம், வங்கதேசத் தலைநகர் டாக்காவில் உள்ள உணவகத்துக்குள் புகுந்து ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டனர். 5 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். அந்த பயங்கரவாதிகளில் ஒருவர், ஜாகிர் நாயக்கின் பேச்சுகளை பிரசாரம் செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், ரஷீத் ஃபாரங்கி மஹாலி இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.
ஜாகிருக்கு எதிராக நடவடிக்கை வேண்டும்-திக்விஜய் சிங்: இதனிடையே, ஐ.எஸ். அமைப்புடன் ஜாகிர் நாயக்குக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் இருக்கும் பட்சத்தில், அவருக்கு எதிராக மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் கூறினார்.
முன்னதாக, ஜாகிர் நாயக் தலைமையில் கடந்த 2012-ஆம் ஆண்டு நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில், திக்விஜய் சிங் பங்கேற்பது போன்றும், அப்போது ஜாகிரை அவர் புகழ்வது போன்றும் விடியோ காட்சி ஒன்று ஊடகங்களில் வெளியானது.திக் விஜய் மீது பாஜக தாக்கு: ஜாகிர் நாயக் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் திக் விஜய் சிங் பங்கேற்பது போன்று விடியோ காட்சி வெளியாகி உள்ள நிலையில், அதற்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து அக்கட்சியின் தேசியச் செயலர் ஸ்ரீகாந்த் சர்மா கூறுகையில், “இதுதான் காங்கிரஸின் குணம். அக்கட்சி பயங்கரவாதத்தைக் கொண்டாடுகிறது’ என்றார்.